அண்ணா தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது: கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பா.ஜ.க. விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன். பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10ந்தேதி வரை கட்சி பணிகளில் ‘பிஸி’யாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.