Take a fresh look at your lifestyle.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கேரளா சென்றார் ஸ்டாலின்

27

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொச்சி சென்றார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று வைக்கத்தில் நடைபெறுகிறது. கேரள அரசு சார்பில் நடத்தப்படும் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 22ந்தேதி கடிதம் எழுதி இருந்தார். கேரள அமைச்சர் சாஜி செரியன் சென்னைக்கு நேரில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அந்த கடிதத்தை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருவதாக இசைவு தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கொச்சி சென்றடைந்தார்.

கொச்சின் விமான நிலையத்தில், கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி, கொச்சின் மாவட்ட கலெக்டர் என்.எஸ்.கே. உமேஷ், கேரள மாநில தி.மு.க. மாநிலச் செயலாளர் முருகேஷ், தலைவர் மோகன் தாஸ், பொருளாளர் ஜார்ஜ் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக குமரகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்தார். அவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் விடுதியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கம் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள நினைவு தூணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தி வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துகின்றனர்.

அதன் பிறகு அங்கு நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் இரு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இதில் நூற்றாண்டு விழா லோகோவை (இலட்சினை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, கேரள பெண் எம்.எல்.ஏ. ஆஷா பெற்றுக் கொள்கிறார். வைக்கம் சத்தியாகிரக புத்தகத்தை பினராயி விஜயன் வெளியிட தாமஸ் எம்.பி. பெற்றுக்கொள்கிறார்.