‘ஜி’ பே மூலம் லஞ்சம் வாங்கிய காவலர்கள் இருவரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரி கண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் படப்பை, வாலாஜாபாத் – தாம்பரம் சாலையில் ரோட்டில் காரில் அமர்ந்தபடி தனது மாமா மகளிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மணிமங்கலம் காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரியும் அமிர்தராஜ் (30), மணிபாரதி (31) ஆகிய இருவரும் அங்கு ரோந்து வந்துள்ளனர். காரில் பெண்ணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மீது பொய் வழக்குப் போடுவதாக இருவரும் மிரட்டியுள்ளனர். மேலும் கிருஷ்ணனிடம் ‘ஜி’ பே மூலம் 4 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக கிருஷ்ணன் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் நேற்று புகார் அளித்தார்.
அது தொடர்பாக விசாரணை நடத்த அமல்ராஜ் உத்தரவிட்டார். இதில் காவலர்கள் இருவரும் கிருஷ்ணனை மிரட்டி ஜி பே மூலம் பணம் பறித்தது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து இருவரையும் கைது செய்ய கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதனையடுத்து அமிர்தராஜ், மணிபாரதி இருவர் மீதும் 384 (மிரட்டிப் பணம் பறித்தல்), 506 (1) (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 27ம் தேதிவரை நீதிமன்றக்காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.