சென்னை, பெரவள்ளூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து சுமார் ஒன்னரை டன் எடையுள்ள 1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை, பெரவள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (28.04.2023) பெரவள்ளூர், லோகோ பிரிட்ஜ் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த Dost லோடு வாகனத்தை நிறுத்தி 2 நபர்களிடம் விசாரணை செய்து, சோதனை செய்த போது, வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் குட்கா புகையிலைப்பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த செல்லப்பா (55) மற்றும் லோடு வாகன ஓட்டுநர் சசிகுமார் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம் உட்பட 50 சாக்குமூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 Dost லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட செல்லப்பா மீது ஏற்கனவே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு பின்னர் நேற்று (28.04.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.