Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

116

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செங்குன்றத்தில் 23 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை செங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஆவடி காவல் ஆணையரகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். செங்குன்றம் பேருந்து நிலையம், விபி பால் நிலையம் அருகே வாகன சோதனை நடத்திய போது அங்கே கையில் பையுடன் நின்றிருந்தவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் பைக்குள் பதுக்கி வைத்திருந்த மொத்தம் 23 கிலோ 680 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் சென்னை மின்ட், அக்ரஹாரத்தைச் சேர்ந்த அசோக் (வயது 44), தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சீனிவாசன் (43) என்பது தெரியவந்தது. கஞ்சாவை இருவரும் ஆந்திரா, பாடகேரி மலையில் இருந்து வாங்கி வந்து சென்னை எண்ணூர், புளியாந்தோப்பு, பெரும்பாக்கம், மற்றும் பூக்கடை ஆகிய இடங்களில் சில்லறையாக விற்பதாக போலீசில் வாக்குமூலம் அளித்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.