Take a fresh look at your lifestyle.

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை – அண்ணாமலை பேட்டி

18

தமிழகத்தில் அதிமுக – பா.ஜ.க. கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டப்படி எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கிறதோ, அவரது பதவிக்காலம் சஸ்பெண்டு ஆகும். லட்சத்தீவு எம்.பி.க்கு இதே பிரச்சினை உள்ளது. பீகார், உத்தரபிரதேசத்தில் இதுபோல் சில எம்.பி.க்களுக்கு நடந்துள்ளது. ராகுல் காந்திக்கு வேண்டுமென்றே சூரத் கோர்ட் தண்டனை வழங்கியுள்ளதாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இதனை திசைதிருப்பி வருகிறார்கள். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் மேல்முறையீடு செய்ய தான் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரதீய ஜனதா அதி.மு.க. கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நான் டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அமித்ஷாவுடனான எனது சந்திப்பு வழக்கமானதே. கடந்த ஒரு மாத காலத்தில் 2, 3 முறை கர்நாடக தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை நான் சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பின்போது பாஜக வளர்ச்சி, கட்சிப் பணிகள் பற்றி பேசினேன். தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசினேன். தமிழக தி.மு.க. ஆட்சி அமைந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஒரு இடைத்தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தின் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் நான் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பற்றியே அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன். நாங்கள் தமிழகத்தில் வேகமாக வளர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம். பாஜக மக்கள் செல்வாக்கைப் பெற விரும்புகிறது. ஆளுங்கட்சியாக வளர விரும்புகிறது. அது குறித்தே பேசினேன். மேலும் கூட்டணி விவகாரங்களில் பாஜக மத்தியக் குழு தான் எந்த ஒரு முடிவும் எடுக்கும். ஆகையால் நான் கூட்டணி விவகாரங்கள் பற்றி ஏதும் பேசவில்லை.

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் தங்கள் கட்சி வளர வேண்டும் என அந்த கட்சியில் இருப்பவர்கள் யாரும் இதுவரை கூறவில்லை. தி.மு.க.வுடனான காங்கிரஸ் கூட்டணி ஒரு விசித்திரமான கூட்டணி. எங்களது கூட்டணி ஆக்கப்பூர்வமான கூட்டணி. நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எல்லாக் கட்சியினரும் அவர்கள் கட்சியே வளர வேண்டும் என்றே விருப்பம் இருக்கும். கூட்டணியில் இருந்தாலும் அவ்வாறே கட்சிகள் நினைக்கும், செயல்படும். மேலும், ஒரு கூட்டணியில் சிராய்ப்புகள், உரசல்கள் வருவது சகஜமே. மற்றபடி எங்கள் கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணி. எனக்கோ, பாஜகவுக்கோ எந்த ஒரு தனிப்பட்ட கட்சி, தலைவர் மீது கோபமில்லை.தேர்தல் வாக்குறுதி எதுவும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் அவர்கள் செய்யவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி தொடர்பாக கவர்னர் திருப்பி அனுப்பி இருக்கிறார். ஆளுநர் பல்வேறு கேள்விகளை கேட்கிறார். ஆனால் இந்த அரசு திருப்பித் திருப்பி மசோதாவை அனுப்புகிறது.

கவர்னர் மசோதாவிற்கு கையெழுத்து போட்டாலும் 100 சதவீதம் நீதிமன்ற தடை வர வாய்ப்பு உள்ளது எனத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அனுப்புவதால் தி.மு.க. அரசுக்கும் சில அமைச்சர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளுக்குள் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் தான் போகப்போகிறது. தொடர்ந்து பலமுறை இல்லை என மறுத்தாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் கமல்ஹாசன் நடந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.