Take a fresh look at your lifestyle.

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்

30
தமிழக சட்டசபையில் 2023 24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். சட்ட சபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9 ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து சில நாட்கள் சட்டசபை நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் 2023 24ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் நாளை (20 ந்தேதி) தாக்கல் செய்யப்படுகிறது. இதை மின்னணு வடிவில் (‘இ பட்ஜெட்’) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதன்பிறகு, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பட்ஜெட் மீதான விவாதத்துக்காக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ம் ஆண்டு முதல் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 21 ந்தேதி தாக்கல் செய்ய உள்ளார். 23, 24, 26, 27ம் தேதிகள் என 4 நாட்களுக்கு சட்டசபை கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது, பட்ஜெட் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். உறுப்பினர்களின் விவாதத்துக்கு, நிறைவு நாளில் நிதி அமைச்சர் பதில் அளிப்பார். மேலும், இந்த நிதி ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளையும் நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

முன்னதாக, கடந்த 9 ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களிலும், நிதி மேம் பாட்டுக்கான பல்வேறு புதிய திட்டங்கள், வழிமுறைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.