பிளஸ்2 தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு: சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதவராத 50 ஆயிரம் மாணவர்களைக் கண்டறிந்து வரும் ஜூலை மாதம் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி கூறினார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் நாளில் நடந்த மொழிப்பாட தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: 50 ஆயிரம் மாணவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. கொரோனா காலம் அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு பிறகு பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஒரு குழந்தை கூட பள்ளியை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை பணியாற்றி வருகிறது. கொரோனா காலத்தில் 10- ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். இவர்கள்தான் தற்போது 12 ம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர். கொரோனா தொற்றால் இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். இதில் 78 ஆயிரம் பேர் தற்போது தேர்வு எழுதி வருகின்றனர். வரும் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வுக்கான பட்டியல் தயார் செய்யும்போது குறைந்தபட்சம் 75 சதவீத வருகைப் பதிவு கணக்கில் கொள்ளப்படும். துணைத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.
பள்ளி வாரியாக குழு அமைத்து ஆப்சென்ட் ஆன மாணவர்களை மீண்டும் தேர்வு எழுதவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும். துணைத் தேர்வுக்கு தயார் செய்ய சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுத வராத 50 ஆயிரம் மாணவர்களைக் கண்டறிந்து வரும் ஜூலை மாதம் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
வரும் கல்வி ஆண்டில் ஒரு வாரத்தில் 3 நாட்கள், 2 வாரத்தில் 6 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பட்டியல் தயார் செய்து நடடிக்கை எடுக்கப்படும். 4 வாரத்திற்கு மேல் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், அந்த மாணவர்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்படும். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.