Take a fresh look at your lifestyle.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறார் மன்றம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

176

தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் சிறார் மன்றங்களுக்கு இடையேயான நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் அமல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 காவல் சிறார் மன்றங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 651 சிறுவர்கள், 289 சிறுமிகள் உள்பட 940 சிறார்கள் இந்த மன்றம் மூலம் பரமரிக்கப்பட்டும் மற்றும் பயன் பெற்றும் வருகிறார்கள். இந்த மன்றத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறமைகளை வளர்க்கவும் இந்திய அளவில் பங்கு பெற வைக்கவும், கபடி, கைப்பந்து, கால்பந்து, பந்து எரிதல், 100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதன்பேரில் கண்ணகி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று 25.03.2023 காலையிலிருந்து மாலை வரை தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சங்கர் நகர், பீர்க்கன்கரணை, பள்ளிக்கரணை, சேலையூர், செம்மஞ்சேரி, மணிமங்கலம். பெரும்பாக்கம், கானத்தூர், சிட்லபாக்கம் மற்றும் கண்ணகிநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு இடையே தொடர் ஓட்டம் 100 மீட்டர் ஓட்டம், கால் பந்து, கைப்பந்து மற்றும் கபடி போன்ற (Police Boys Club) விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன.

 

இப்போட்டியில் கண்ணகி நகர் குழு. ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றது. மேலும், இந்தப் போட்டியில், 475 சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் 11 குழுக்களாக கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டியதோடு மட்டுமல்லாமல். இக்குழுக்களுக்கு, தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள், நீதி போதனைக் கதைகள் உட்பட புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் காவல் ஆணையரக இணைக்கமிஷனர் மூர்த்தி, பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.