போலி ஆவணம் மூலம் ரூ. 120 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த இருவரை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் சவுத்ரி. இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான 3.98 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தின் அசல் ஆவணங்களை திருடி நிறுமங்கள் பதிவு அலுவலகத்தில் போலி ஆவணங்களை மர்ம நபர்கள் சமர்ப்பித்து நில அபகரிப்பு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தார். அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அமல்ராஜ், மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவுக்கு உத்தரவிட்டார். துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி கிராமத்தில் உள்ள 3.98 ஏக்கர் நிலத்தின் அசல் ஆவணங்களை திருடி வைத்துக்கொண்டு கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் போலியான சில ஆவணங்களை கொடுத்து அபகரிக்கப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சேர்ந்த சங்கரன், செங்கல்பட்டைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த தலைமறைவான நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.