சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள் மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 சவரன் தங்க நகைகள், 41.5 கிலோ வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.62,000/-, 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, வடபழனி, குமரன் காலனி, 2வது தெரு, எண்.34 என்ற முகவரியில் தனியார் போட்டோ லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார் (65). இவர் வெளியூர் சென்று விட்டு கடந்த 28.02.2023 அன்று வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது யாரோ அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பூட்டை உடைத்த சுமார் 33 சவரன் தங்க நகைகள், 57 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.13,50,000ஐ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தோஷ்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல் குழுவினர் நேற்று (13.03.2023) விருகம்பாக்கம், நடேசன் நகர், 2வது தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது, அவர் மேற்படி இருசக்கர வாகனத்தை வானகரம் பகுதியில் திருடி தப்பி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர் விருகம்பாக்கம் பகுதியில் மேற்படி சந்தோஷ்குமார் வீட்டில் தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள், மற்றும் ரொக்கப்பணத்தை திருடியுள்ளதும் தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அம்பத்தூரைச் சேர்ந்த முத்து (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 37 சவரன் தங்க நகைகள், 41.5 கிலோ வெள்ளி கட்டிகள், ரொக்கம் ரூ.62,000-, 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கனவே 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட முத்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.