Take a fresh look at your lifestyle.

ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு

55

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டது. ஊழல்வாதிகளான நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியைச் சேர்த்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி, குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல். ஏ.வுமான புர்னேஷ் மோடி தொடர்ந்த இந்த வழக்கில், சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் தீர்ப்பு வந்தது. ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உத்தரவிட்டார்.

இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கியும் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன், குற்ற வழக்கில் மக்கள் பிரதிநிதி ஒருவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது பதவி பறிக்கப்படும் என்பதால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறி இருப்பதா வது:-

சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதன் விளைவாக கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் ராகுல் காந்தி, தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து (அதாவது மார்ச் 23-ந் தேதி) மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.