Take a fresh look at your lifestyle.

தூத்துக்குடி, திருவாரூரில் ரவுடிகளை சுட்டுப் பிடித்த போலீசார்

56

தூத்துக்குடி மற்றும் திருவாரூரில் கொலை வழக்கு ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போலீசாரை ரவுடிகள் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

தூத்துக்குடி, சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் (வயது 45) கடந்த 22ம் தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்றபோது மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேஷின் அண்ணன் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதும், இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவகுமார் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

மேலும் சிவகுமார் கொலை வழக்கில் கைதான ராஜேஷ் கோவை சிறையில் இருப்பதும், அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு வக்கீல் முத்துக்குமார் இடையூறாக இருந்ததும், இதனால் ராஜேஷின் ஆதரவாளார்கள் வக்கீல் முத்துக்குமாரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது. வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கு தொடர்பாக வேல்முருகன் (25), ராஜரத்தினம் (25), இலங்கேசுவரன் (30), முத்துராஜ், ரமேஷ் ஆகிய 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் வேல்ருகன், ராஜரத்தினம், இலங்கேசுவரன் ஆகிய 3 பேரையும் சிப்காட் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராஜேஷின் சகோதரரான கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 38) என்பவர் புதுக்கோட்டை அருகே தட்டப்பாறையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் தலைமை காவலர் சுடலைமணி உள்பட 7 பேர் கொண்ட குழு அங்கு விரைந்து சென்றது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஜெயபிரகாஷ் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். ஆனால் அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த தப்பி செல்வதற்காக தனது கையில் இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி ஆகிய இருவரையும் ஜெயபிரகாஷ் கையில் வெட்டினார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் ஜெயபிரகாசின் காலில் சுட்டார். இதனால் அவர் ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார்.

உடனே அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான இவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் பாரதி (வயது 32), வீரபாண்டியன் (29), சூர்யா (21), அரசு (20), மாதவன் (21) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து மீதமுள்ள கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிரவீன் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே பிரவீன் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக் டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பிரவீனை பிடிக்க முயன்றபோது அவரை மீண்டும் தாக்கி உள்ளான். இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் காலில் சுட்டார். இதில் பிரவீன் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து பிரவீன் மற்றும் அவரால் வெட்டப்பட்டு காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை பெறும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவிடமும் விசாரணை நடத்தி அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.