நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி பாராட்டினார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். சென்னையில் நேற்று பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொண்டு விட்டு, இரவு மைசூர் புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.20 மணிக்கு மைசூரில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு மோடி சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமன ஹள்ளிக்கு சென்றார்.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர், வனப்பகுதியில் மட்டும் 22 கி.மீ. ஜீப்பில் பயணம் சென்று வனவிலங்குகளை பார்வையிட்டார். ஜீப்பிலிருந்து இறங்கி பல்வேறு புகைப்படங்களை ஆர்வத்துடன் எடுத்து மகிழ்ந்தார். புலிகள் காப்பக பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு காலை 10.25 மணிக்கு வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை பார்வையிட்டார். முகாமிலிருந்த யானை பாகன்கள் தேவராஜ், சுகுமாறன் ஆகிய இருவரிடமும் மோடி பேசினார். அவர்களிடம் யானைகள் வளர்ப்பு, பராமரிப்பு பற்றிய விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து உங்களுக்கு ஏதும் குறைகள் உள்ளனவா என்றும் கேட்டார். அங்கிருந்த யானைகளுக்கு உணவாக கரும்புகளை வழங்கி பிரதமர் மோடி மகிழ்ந்தார். அப்போது யானை துதிக்கையை தூக்கி பிரதமரிடம் காண்பித்தது. அன்போடு அதனை தட்டி கொடுத்தார்.
இதனையடுத்து ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர்களின் வாழ்க்கை முறை, குட்டி யானை வளர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது அவர்களின் சேவைகளை பாராட்டி, பரிசுகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவப்படுத்தினார். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொம்மன் பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட மீன் காளன், பொம்மன், மாதன் ஆகியோரிடம் பேசி, அந்த புலியை பிடித்தது குறித்தும், அதனை பராமரித்து வருவது குறித்தும் கேட்டறிந்தார். முகாமில் சிறப்பாக பணியாற்றி வரும் 12 கள பணியாளர்களுக்கும், 8 முன் கள பணியாளர்களுக்கும் பிரதமர் மோடி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்களுடன் புலிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து பிரதமர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, கலெக்டர் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெப்பக்காட்டில் பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்றார். மசினகுடியில் ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் மோடி காரிலிருந்து இறங்கி அங்கு சாலையின் இரு புறமும் இருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தார். அவருக்கு பாரம்பரிய உடை அணிந்த பழங்குடியின மக்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதாவினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மைசூரில் நடைபெறும் நாட்டின் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் பொன்விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து சிறப்பு விமான மூலம் டெல்லி செல்கிறார்.