Take a fresh look at your lifestyle.

எதிர்க்கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு வந்தால் நாடாளுமன்ற முடக்கம் தீர்க்கப்படும்: அமித்ஷா தகவல்

43

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் தற்போது நாடாளு மன்றத்தில் நிலவிவரும் முடக்கத்திற்கு தீர்வு ஏற்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவன நிகழ்வில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நாடாளுமன்ற முடக்கத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சில பிரச்சினைகள் உள்ளன. இரண்டு தரப்பும் நாடாளுமன்ற சபாநாயகர் முன்பு அமர்ந்து விவாதிக்கட்டும். அவர்கள் இரண்டு அடி முன் வந்தால் நாங்களும் இரண்டு அடி முன்னேறிச் செல்வோம். அதன் பிறகு நாடாளுமன்றம் இயங்கத் தொடங்கும். இரண்டு தரப்பும் ஒருவொருவருக்கொருவர் பேச வேண்டும். நாங்கள் முயற்சி எடுத்தும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான முன்னெடுப்பும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று முழக்கம் இடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்கவில்லை. விதிகளின் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஒருவர் சாலையில் பேசுவது போல நாடாளுமன்றத்தில் பேச முடியாது. இந்த அடிப்படையான புரிதல் அவர்களிடம் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருந்த போது, இந்திராகாந்தி இங்கிலாந்துக்கு சென்றிருந்தார். அப்போது இங்கிலாந்து பத்திரிக்கையாளர்கள் சிலர் இந்திரா காந்தியிடம் உங்கள் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “எங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை நான் இங்கே கூற விரும்பவில்லை. என்னுடைய நாடு நன்றாக இருக்கிறது. நான் என்னுடைய நாட்டைப் பற்றி எதுவும் கூறமாட்டேன். நான் ஒரு இந்தியராக இங்கே வந்திருக்கிறேன்” என்றார்.

அதானி விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய இரு நபர் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. அனைவரும் அவர்களிடம் உள்ள ஆதாரங்களை அந்த குழுவிடம் சமர்பிக்கலாம். குற்றம் ஏதும் நடந்திருப்பின் தண்டனையில் இருந்து யாரும் தப்பிக்க கூடாது. அனைவருக்கும் நீதிமன்ற நடைமுறைகள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். செபி அமைப்பும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் அமித்ஷா கூறினார்.