Take a fresh look at your lifestyle.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

32

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பலரும் பணத்தை இழந்து மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்கின்றனர். இந்த அவலத்தை தடுக்கும் விதத்தில் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டம் வலுவில்லாததாகக் கூறி அதை கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தி.மு.க. அரசு, சட்ட வல்லுநர்களின் கருத்தைப் பெற்றும், பல்வேறு தரவுகளை கண்டறிந்தும், புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை கூடியதும் அந்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவை அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் தமிழக அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவை கவர்னர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. தமிழக அரசுக்கு இதுதொடர்பான சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று கூறி அந்த மசோதாவை 3 மாதங்கள் கழித்து தமிழக அரசிடமே கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டார்.

இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொண்டு வந்து உரையாற்றினார். அந்த சட்ட மசோதா ஏகமனதாக எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை நேற்று முன்தினமே சட்டத்துறைக்கு சட்டசபை செயலகம் அனுப்பி வைத்தது. அதைத் தொடர்ந்து அந்த மசோதாவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றுவிட்டு, நேற்று மாலை அதை கவர்னரின் அலுவலகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.