கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே இரண்டு காட்டு யானைகள், சுற்றித் திரிவதை கிராம மக்கள் இன்று பார்த்தனர். இந்தக் காட்டு யானைகள், காட்டு கொள்ளை கிராமத்தின் அருகே சின்னசாமி என்பவரின் தென்னந்தோப்பில் முகாமிட்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் யானையைக் காண ஆவலுடன் கூடினர். அப்போது, போச்சம்பள்ளி, புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராம்குமார் (27) என்பவர் யானையின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை, ராம்குமாரை துரத்தி காலால் மிதித்து கொன்றது. தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாரூர் பகுதியானது சமவெளி பகுதியாகும். அருகில் வனப்பகுதி ஏதும் இல்லாத நிலையில், காட்டு யானைகள் நுழைந்துள்ளது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.