சென்னை பழவந்தாங்கல் பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்த நைஜீரியா பெண்ணை போலீசார் கைது செய்து 61 கிராம் MD மெத்தம் பெட்டமைன், ரொக்கம் ரூ.33 ஆயிரம் மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை நகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) என்னும் அதிரடி நடவடிக்கையை கமிஷனர் சங்கர்ஜிவால் மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாவட்ட துணைக்கமிஷனர்கள் மேற்பார்வையில் போதை ஆசாமிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று காலை அங்குள்ள மூவரசன்பேட்டை, குளக்கரை அருகே ரகசியமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அவரை சோதனை செய்த போது, அவர் விற்பனைக்காக MD மெத்தம்பெட்டமைன் போதைபொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நவபர் ஓனினியே மோனிகா (வயது 32) என்பதும் சென்னை தரமணி, ஸ்ரீராம் நகரில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 61 கிராம் MD மெத்தம் பெட்டமைன், ரொக்கம் ரூ.33,000 மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட நவபர் ஓனினியே மோனிகா இன்று (18.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.