சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மெத்தம்பெடமைன் போதைப்பொருள் கடத்திய நைஜீரியா ஆசாமியை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னையில் மெத்தம்பெடமைன் போதைப்பொருளுடன் நைஜீரியா நாட்டு ஆசாமியை கைது செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக தமிழக போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் ஐஜி ரூபேஷ்குமார் மீனா மேற்பார்வையில் சென்னை பிரிவு டிஎஸ்பி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை 7.30 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவு வாயில் வால்டாக்ஸ் சாலையில் கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த நைஜீரியா நபரைப் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பையில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள 59 கிராம் மெத்தம்பெடனை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த நபர் பெயர் விக்டர் ஐகென்னா (வயது 32). நைஜீரியா, அபியா ஸ்டாட் மாநிலத்தைச் சேர்ந்த அவர் டூரிஸ்ட் விசாவில் கடந்த 2014ம் ஆண்டு தமிழகம் வந்துள்ளார். பின்னர் 2015ம் ஆண்டு விசா காலாவதியாகி விட்டதால் அனுமதியின்றி தங்கியிருந்ததாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர். பின்னர் கடந்த 2022ம் ஆண்டு ஜாமினில் வெளியில் வந்துள்ளார் போன்ற விவரங்கள் போலீசாரின் விசாரணையில் வெளிவந்தன. அவர் மெத்தம்பெடமைனை எங்கிருந்து வாங்கி வந்தார் போன்றவை குறித்து போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.