Take a fresh look at your lifestyle.

சிறந்த இயற்கை விவசாயிக்கு ‘நம்மாழ்வார்’ விருது: ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு

41

சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:

தொழிற்சாலைகளுக்குத்‌ தேவையான இடுபொருட்களைப்‌ போதிய அளவுக்கு விளைவித்துத்‌ தருவதும்‌, வேளாண்மைத்‌ துறையின்‌ கடமை. இதை மனதில்‌ வைத்து, 2021 22ம்‌ ஆண்டில்‌ பல தொலைநோக்குத்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தியதன்‌ காரணமாக மொத்த சாகுபடிப்‌ பரப்பு, ஒரு லட்சத்து 93 ஆயிரம்‌ எக்டர்‌ அதிகரித்து, மொத்தமாக 63 லட்சத்து 48 ஆயிரம்‌ எக்டர்‌ பரப்பில்‌ சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
மண்‌ வளம்‌ காக்கும்‌ பணிகளால்‌ ஆறு ஆண்டுகளுக்குப்‌ பிறகு 2021 22ம்‌ ஆண்டில்‌, 119 லட்சத்து 97 ஆயிரம்‌ மெட்ரிக்‌ டன்‌ உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடையப்பெற்றது. இது 2020 21ம்‌ ஆண்டைவிட 11 லட்சத்து 73 ஆயிரம்‌ மெட்ரிக்‌ டன்‌ கூடுதல்‌.

தமிழ்நாட்டில்‌ நிலத்தடி நீரின்‌ அளவு அதிகரித்திருக்கிறது. 2021ம்‌ ஆண்டில்‌ வரையறுக்கப்பட்ட நாளான ஜூன்‌ 12ம்‌ தேதியன்றும்‌, 2022ம்‌ ஆண்டில்‌, 19 நாட்கள்‌ முன்னதாக, மே 24ம்‌ தேதியன்றும்‌ மேட்டூர்‌ அணையைத்‌ திறந்து வைத்ததனால்‌, தஞ்சைத்‌ தரணிக்கு தடையில்லாமல்‌ நீர்‌ கிடைத்தது. இதனால்‌, 2022 23ம்‌ ஆண்டில்‌ டெல்டா மாவட்டங்களில்‌ 5 லட்சத்து 36 ஆயிரம்‌ ஏக்கர்‌ பரப்பளவில்‌ குறுவை சாகுபடி நிகழ்ந்து, சாதனை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில்‌ நிகழாத சாதனை.

கடந்த 2 ஆண்டுகளில்‌ விவசாயத்திற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்‌ புதிய மின்‌ இணைப்புகளை வழங்கி, சாதனை படைத்ததன்‌ விளைவாக, வயல்களில்‌ பம்புசெட்டுகள்‌ மூலம்‌ தண்ணீர்‌ பாய்ந்து வருகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2021 22ம்‌ ஆண்டில்‌ 185 வேளாண்‌ பட்டதாரிகள்‌ தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு லட்சம்‌ ரூபாய்‌ மானியம்‌ வழங்கப்பட்டு, அவர்கள்‌ மூலமாக அக்ரி கிளினிக்‌, வேளாண்மை சார்ந்த தொழில்கள்‌ தொடங்கப்பட்டன.

உற்பத்தி செய்யப்படும்‌ பொருட்களுக்கு உரிய விலை உத்தரவாதம்‌ அளிக்கப்பட்டால்தான்‌ உற்சாகத்தோடு உழவர்கள்‌ உழைப்பார்கள்‌. இதை எண்ணத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ மூலம்‌ உழவர்களிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்குமேல்‌ கூடுதல்‌ விலைக்கு நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில்‌ நேரடிக்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ அதிக எண்ணிக்கையில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. நெல்‌ மட்டுமின்றி, பயறு வகைகளும்‌, கொப்பரைத்‌ தேங்காயும்‌ கொள்முதல்‌ செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக்‌ டன்‌ கரும்புக்கு 195 ரூபாய்‌ கூடுதலாக வழங்கி, கொள்முதல்‌ நிகழ்த்தப்படுகிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும்‌ வண்ணம்‌ உழவர்‌ சந்தைகள்‌, மின்னணு சந்தைகள்‌, ஒழுங்குமுறை விற்பனைக்‌ கூடங்கள்‌ செயல்பட்டு வருகின்றன.

இயற்கை இடர்பாடுகளால்‌ ஏற்படும்‌ வருவாய்‌ இழப்பிலிருந்து உழவர்களின்‌ வாழ்வாதாரத்தைக்‌ காத்திட பிரதம மந்திரி பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தில்‌ 2021 22ம்‌ ஆண்டில்‌ 40 லட்சத்து 74 ஆயிரம்‌ ஏக்கர்‌ பரப்பளவில்‌ 26 லட்சம்‌ விவசாயிகள்‌ பதிவு செய்தனர்‌. தமிழ்நாடு அரசால்‌ 1,695 கோடி ரூபாய்‌ காப்பீட்டுக்‌ கட்டண மானியமாக வழங்கப்பட்டு, 6 லட்சத்து 71 ஆயிரம்‌ விவசாயிகளுக்கு இதுவரை 783 கோடி ரூபாய்‌ இழப்பீட்டுத்‌ தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு வடகிழக்குப்‌ பருவமழை, கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்‌ பருவம்‌ தவறிப்‌ பெய்த கனமழையினால்‌ பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 82 ஆயிரம்‌ விவசாயிகளுக்கு இடுபொருள்‌ மானியமாக 163 கோடியே 60 லட்சம்‌ ரூபாய்‌ மாநிலப்‌ பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வேளாண்மையில்‌, விதையில்‌ தொடங்கி, விற்பனை வரை, 22 முக்கிய வேளாண்‌ சேவைகள்‌, ‘உழவன்‌ செயலி’ மூலம்‌ நல்ல முறையில்‌ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வரும்‌ ஆண்டில்‌ தமிழ்நாட்டில்‌ 127 லட்சம்‌ மெட்ரிக்‌ டன்‌ உணவு தானியங்கள்‌ உற்பத்தி செய்யத்‌ திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிற்றூரும்‌ தன்‌ தகுதிக்கேற்ப தன்னிறைவு அடைய முடியும்‌. தண்ணீர்‌ வளத்திற்கு ஏற்பவும்‌, மண்ணின்‌ வளத்திற்கு ஏற்பவும்‌, அந்தச்‌ சிற்றூரில்‌ வேளாண்மை முழுமையாக வளர்வதற்குத்‌ தேவையான கட்டமைப்பு வசதிகளையும்‌, வேண்டிய மற்ற பணிகளையும்‌ மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே, இத்திட்டம்‌. வரும்‌ ஆண்டில்‌ இத்திட்டம்‌ 2,504 கிராம ஊராட்‌சிகளில்‌ 230 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌.

தொகுப்பாக 10 ஏக்கர்‌ தரிசாக உள்ள பகுதிகளைக்‌ கண்டறிந்து, ஆழ்துளைக்‌ கிணறு அமைத்து, மின்‌ இணைப்பு அல்லது சூரிய சக்தி பம்ப்செட்டுகள்‌ இலவசமாக அமைத்துத்‌ தரப்படும்‌. மின்‌ இணைப்பு கிடைத்தவுடன்‌, மா, கொய்யா, நெல்லி போன்ற பல்லாண்டு பலன்‌ தரக்கூடிய பழமரக்கன்றுகள்‌ நடவு செய்யப்பட்டு, அதில்‌ சொட்டு நீர்ப்‌பாசன வசதியும்‌ மானியத்தில்‌ நிறுவப்படும்‌.

ஒவ்வொரு கிராமப்‌ பஞ்சாயத்திலும்‌, தென்னை மரங்கள்‌ இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள்‌ வீதம்‌ மொத்தம்‌ 15 லட்சம்‌ தென்னங்கன்றுகள்‌ இலவசமாக 2,504 கிராமப்‌ பஞ்சாயத்துகளில்‌ வழங்கப்படும்‌. விவசாயிகளின்‌ வயல்களில்‌ 600 பண்ணைக்‌ குட்டைகள்‌ அமைத்து, கிராமங்களில்‌ நிலத்தடி நீர்மட்டம்‌ உயர வழிவகை செய்யப்படும்‌. மேலும்‌ இப்பண்ணைக்‌ குட்டைகளில்‌ மீன்வளத்துறை மூலமாக மீன்‌ குஞ்சுகள்‌ வளர்த்து, கூடுதல்‌ வருமானம்‌ ஈட்டிடவும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.

300 ஆதிதிராவிடர்‌, பழங்குடியின விவசாயிகளின்‌ வயல்களில்‌, ஆழ்துளைக்கிணறுகள்‌ அமைத்து, அதில்‌ மின்‌ இணைப்பு அல்லது சூரிய சக்தி மூலம்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகளும்‌ இலவசமாக நிறுவப்பட்டு, அதில்‌ சொட்டு நீர்ப்‌ பாசன வசதியும்‌ மானியத்தில்‌ அமைத்துத்‌ தரப்படும்‌. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்‌ துறைக்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள சிறுபாசனக்‌ குளங்கள்‌, ஊருணிகள்‌, வரத்துக்‌ கால்வாய்களைத்‌ தூர்வாரி, பாசன நீர்‌ கடைமடை வரை செல்வதற்கு வழிவகை செய்யப்படும்‌.

இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ கிராமப்‌ பஞ்சாயத்துகளில்‌ விளைபொருட்களை உலர வைத்து சேமிப்பதற்கு வசதியாக 250 உலர்களத்துடன்‌ கூடிய தரம்‌ பிரிப்புக்‌ கூடங்கள்‌ கட்டித்‌ தரப்படும்‌. மேலும்‌, ஊரக வளர்ச்சித்‌ துறையின்‌ மூலம்‌ தடுப்பணைகள்‌, கசிவு நீர்க்குட்டைகள்‌, வயலுக்குச்‌ செல்லும்‌ சாலைகள்‌ போன்ற பல்வேறு பணிகள்‌ ஒருங்கிணைக்கப்பட்டு, திட்டம்‌ செயல்படுத்தப்படுவதால்‌, சாகுபடி நிலப்‌ பரப்பு உயர்ந்து இந்த கிராமங்கள்‌ தன்னிறைவு அடையும்‌. கடந்த வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன்‌ உழவர்களின்‌ கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள்‌ புதிதாகச்‌ சேர்த்துக் கொள்ளப்படும்‌.

2023ம்‌ ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின்‌ பொதுச்‌ சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்‌ ஐந்து ஆண்டுகளில்‌ செயல்படுத்தப்படவுள்ளது. மக்களிடையே சிறுதானியங்களின்‌ பயன்பாட்டை அதிகரிக்கும்‌ வகையில்‌, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு “சிறுதானிய திருவிழாக்களும்‌” இவ்வியக்கத்தின்‌ மூலம்‌ நடத்தப்படும்‌.வரும்‌ ஆண்டில்‌, ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன்‌ 82 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், வருமானத்தை உயர்த்தவும், பல்வேறு திட்டக்கூறுகளுடன் கூடிய பெருந்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில், இத்திட்டமானது மொத்தம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பின்வரும் இனங்களைக் கொண்டு செயல்படுத்தப்படும்.

கிராம வேளாண் முன்னேற்றக் குழு வரும் ஆண்டில், முதல் கட்டமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 2,504 கிராம ஊராட்சிகளில், வேளாண் முன்னேற்றக் குழுக்கள் இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, செயல்படுவதற்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த ஆண்டும் அரசு விதைப் பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை, இனத் தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, 10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில், வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதேபோல, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல், விருதுகள் வழங்கப்படும்.

ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்றுப் பயிர் சாகுபடிக்காக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப்பயிர் சாகுபடி மேற்கொள்ள உதவி அளிப்பதற்காக வரும் ஆண்டில் 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

வரும் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும். வரும் ஆண்டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். குறிப்பாக, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 30,000 தொகுப்புகள் வழங்கப்படும்.

அ) வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணும், நீரும் நச்சுத் தன்மையடைந்து நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இயற்கையான எருவைப் பயன்படுத்தி இரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் முதலமைச்சரால் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்றுக் கட்டணத்திற்கு 10,000 எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில் இதற்கென, 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அங்கக இடுபொருட்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்தக் கரைசல், மீன் அமிலம் போன்றவற்றைத் தயாரித்து, விற்பனை செய்ய ஆர்வமுள்ள 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க ஒரு இலட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வண்டல் மண்ணை, விளைநிலங்களில் பயன்படுத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளும். விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன் பெறும் வகையில், காலதாமதம் இன்றி இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையைப் பெருமளவில் ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வேதியியல் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அங்கக வேளாண் சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல், சாகுபடி மானியம் வழங்குதல், அங்ககச் சான்று பெற பதிவு செய்தல், அங்கக விளைபொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நஞ்சில்லா உணவு விளைவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களில் நச்சுப் பொருட்களின் தன்மையினை அறிந்து அதன் தரத்தை உறுதி செய்யும் வகையில், நச்சு மதிப்பீட்டு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு 50 சதவீத மானியம் வழங்கும் பொருட்டு, வரும் ஆண்டில் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புர இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அங்கக வேளாண்மையின் கீழ் கொண்டுவருவதற்கு சாத்தியமான பகுதிகளைக் கண்டறிவதற்கு, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும், அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.