சென்னை நகரில் 105 சிக்னல்களில் நிறுவப்பட்டுள்ள இசை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு செய்திகளை ஒலிக்க செய்யும் மியூசிக் சிக்னல் திட்டத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை நகரில் போக்குவரத்து காவல்துறையினர் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 105 முக்கிய சந்திப்புகளில் பொது முகவரி அமைப்பை நிறுவியுள்ளது. இந்த சந்திப்பில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினர்கள் இந்த முகவரி அமைப்புகளைப் பயன்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த செய்திகளை அறிவிக்கவும், பயன்படுத்துகின்றனர். ரேடியோ சிட்டி 91.1 FM மற்றும் SAREGAMA போன்ற இசைக் கூட்டாளர்களுடன் இணைந்து சென்னை முழுவதும் உள்ள முக்கியமான 105 சந்திப்புகளில் ‘மியூசிக் சிக்னலை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மியூசிக் சிக்னல்களின் நோக்கம் என்னவென்றால், சிக்னல்களில் காத்திருக்கும்போது, பயணிகள் பொறுமையாகவும் அமைதியாகவும் தங்களுக்குப் பிடித்தமான இசை மற்றும் விழிப்புணர்வு செய்திகளை கேட்டு, பாதுகாப்பான சாலைப் பயனாளர்களாக மாற வேண்டும் என்பதாகும்.
நேற்று இந்த 105 மியூசிக் சிக்னல்களின் இயக்கத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று சென்னை, அண்ணாநகர் ரவுண்டானா சிக்னல் அருகில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி சரத்கர், இணைக்கமிஷனர் மயில்வாகனன், துணை ஆணையாளர் (வடக்கு) ஹர்ஷ் சிங், சரிகம, ரேடியோ சிட்டி போன்ற இசை கூட்டாளர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.