சென்னை, தரமணியில் வீட்டு உரிமையாளரை கொலை செய்த தாய், மகள், மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தரமணி, கம்பர் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்த சாந்தகுமாரி (வயது 68). நேற்று (12.03.2023) காலை அவரது அறையில் முகத்தில் ரத்தக்காயங்களுடன் சாந்தகுமாரி இறந்து கிடந்தார். இது குறித்து சாந்தகுமாரியின் பேரன் கொடுத்த புகாரின்பேரில் தரமணி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், சாந்தகுமாரி வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு இருந்து வரும் இளம்பெண் ஸ்ரீரீஷா மற்றும் அவரது தம்பி அடிக்கடி சாந்தகுமாரியுடன் பேசுவது தெரியவந்தது. அதனையடுத்து ஸ்ரீரிஷாவை பிடித்து போலீசார் விசாரணை தனது மகன், மகளுடன் சேர்ந்து சாந்தகுமாரியை கொலை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து ஸ்ரீரிஷா (21), அவரது தம்பி விஜய்பாபு (18) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இவர்களது தாயார் மேரி (40) ஆகியோரை போலீசார் நேற்றே கைது செய்தனர்.
இறந்துபோன சாந்தகுமாரிக்கும், ஸ்ரீரிஷாவுக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சாந்தகுமாரி, ஸ்ரீரிஷா மற்றும் அவரது தந்தையிடம் வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஸ்ரீரிஷா மற்றும் அவரது தம்பி விஜய்பாபு ஆகியோர் சம்பவத்தன்று (12.03.2023) விடியற்காலை சாந்தகுமாரியின் அறைக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்பொழுது இருவரும் சேர்ந்து சாந்தகுமாரியை தாக்கி, ஸ்ரீரிஷாவின் துப்பாட்டாவால், சாந்தகுமாரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.