மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, நெற்குன்றம், மாதா கோயில் தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி, வயது 40. இவரது கணவர் பெயர் அலோன். லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அலோன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27.04.2021 அன்று இரவு 11.00 மணியளவில் அலோன் தனது மனைவிடம் தகராறில் ஈடுபட்டு அம்மிக்கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து லட்சுமியின் மகன் ஆனந்த் புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அலோனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, அல்லிக்குளம் வளாகத்திலுள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. கோயம்பேடு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (15.03.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஜெயகுமாருக்கு 302 பிரிவுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ. 10,000 -அபராதம் மற்றும் 498 (ஏ) பிரிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாகப் பாராட்டினார்.