Take a fresh look at your lifestyle.

கலாசேத்ரா நடனக் கல்லூரி பாலியல் விவகாரம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பேட்டி

83

கலாசேத்ரா நடனக்கல்லூரியில் பாலியல் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் நேற்று நள்ளிரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவிகள் கலைந்து செல்ல மறுப்பதால் கலாஷேத்ராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தென்சென்னை கூடுதல் கமிஷனர் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:

‘‘கலாசேத்ரா பாலியல் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பாலியல் விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த எழுத்துப்பூர்வமான புகாரும் காவல் நிலையத்துக்கு வரவில்லை. வந்தால் காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேற்று நள்ளிரவு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக தகவல் வந்ததும் அங்கு இணைக்கமிஷனர் மற்றும் துணைக்கமிஷனர் அந்தஸ்த்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கலாசேத்ரா கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை எந்த புகாரும் பெறப்படாத சூழ்நிலையில் கலாசேத்ரா தொடர்பாக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’’ இவ்வாறு பிரேம் ஆனந்த் சின்கா கூறினார்.