கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை: பேராசிரியர் ஹரிபத்மனாபன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா நடனப்பள்ளியில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 5 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார். அதனையடுத்து
கலாஷேத்ராவில் நடந்தது என்ன என்பது பற்றி மாணவிகளிடம் மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் மாணவிகள் கலாஷேத்ராவில் இதுவரை நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பாக விரிவாக பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கலாஷேத்ராவில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார்களை தெரிவித்துள்ளனர். பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க வகையில் பேசுதல், வாய் மொழியாக தேவையில்லாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்துதல், உடலின் அங்கங்களை குறிப்பிட்டு பேசி மனரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடுதல், நிறத்தை குறிப்பிட்டு பேசி மனதை நோகடித்தல் போன்ற செயல்களில் அங்கு பணிபுரியும் பலர் ஈடுபட்டு வருவதாகவும் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கல்லூரியின் முன்னாள் மாணவி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் 354 ஏ (மானபங்கப்படுத்துதல்), 509 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் செயல்படுதல்), பெண்களுக்கெதிரான வன்கொடுமைச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.