தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14 ந் தேதி) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் ‘பிரிட்ஜ் 2023’ 50-வது மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:
நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பம் பல பிரமிப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் கனவாகத் தோன்றியது எல்லாம், இப்போது உண்மையாக வந்து கொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை, ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழுப் பயன்கள் சென்று சேர்ந்திடவும், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது. தகவல் தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின் ஆளுமைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் சார்பில் உயர் கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில், அதன் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பொருளாதார வளம், அதிகரித்த வேலைவாய்ப்பு என இரட்டைப் பலன்களை அடையமுடியும். மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்திட, தகவல் தொழில்நுட்பத் துறை, கல்வித்துறை மற்றும் நாஸ்காம் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டு, “எதிர்காலத்திற்கான ஆலோசனைக் குழுவை” மாநில அரசு அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில், துடிப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிட, திறன் இடைவெளியைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதனை உணர்ந்துதான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஐ.பி.எம். ஆகியவற்றின் மூலமாக 50 ஆயிரம் ஐ.டி., கணினித் துறை மாணவர்களுக்கு 3-கிரெடிட், கட்டாயக் கற்றல் படிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பயிற்சியை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தகவல் தொழில் நுட்பத்திற்கு – இரண்டு பக்கம் உண்டு. அதனை எப்படி, எந்தளவுக்கு, எந்த நோக்கத்துக்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதனுடைய பயன்கள் இருக்கும்.
இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில் நுட்பங்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும் இதனை சில அரசியல் சக்திகள் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைத்தளங்களும் பெருகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். அனைத்துத் துறை வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் கொள்கைக்கு இந்த கருத்தரங்கு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன். தகவல் தொழில்நுட்பத் துறை வளர வேண்டும், அது இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய துறையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.