கூட்டணி பற்றி பாரதீய ஜனதா தேசிய தலைமையே முடிவு செய்யும், மாநில தலைமை அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
நேற்று காலை சேலம் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- பாரதிய ஜனதா என்பது ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்து தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அண்ணா தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை. எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். சோதனைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம் என அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.