ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி 2-வது வெற்றியை பெற்றது.
இந்த போட்டி தொடரில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. குஜராத் அணியில் காயம் காரணமாக விலகிய கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டேவிட் மில்லர் இடம் பெற்றார். டெல்லி அணியில் ரோமன் பவெல்லுக்கு பதில் அன்ரிச் நோர்டியா சேர்க்கப்பட்டார். விக்கெட் கீப்பர் அபிஷேக் போரெல் அறிமுக வீரராக இடம் பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதலில் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஆகியோர் களம் இறங்கினர். குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர். 3-வது ஓவரில் பிரித்வி ஷா (7 ரன்) முகமது ஷமியின் ஷாட் பிட்ச் பந்து வீச்சை அடித்து ஆடினார். இதில் மேல் நோக்கி எழும்பிய பந்தை அல்ஜாரி ஜோசப் கேட்ச் பிடித்தார்.
அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் (4 ரன்) முகமது ஷமி பந்து வீச்சில் போல்டு ஆனார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி 52 ரன்கள் சேர்த்தது. நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டேவிட் வார்னர் (37 ரன்கள், 32 பந்து, 7 பவுண்டரி), ரீலி ரோசவ் (0) ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் அல்ஜாரி ஜோசப் வீழ்த்தி அசத்தினார். அடுத்து வந்த அபிஷேக் போரெல் (20 ரன்) ரஷித் கான் சுழலை அடித்து ஆட முயற்சித்து ஸ்டம்பை பறிகொடுத்தார். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய சர்ப்ராஸ் கான் (30 ரன்) மற்றும் அமன் கான் (8 ரன்) ஆகியோரது விக்கெட்டையும் ரஷித் கான் கைப்பற்றினார். அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்திய அக்ஷர் பட்டேல் (36 ரன்கள், 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி ஓவரில் முகமது ஷமி பந்து வீச்சில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும், அன்ரிச் நோர்டியா 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களம் கண்ட விருத்திமான் சஹா (14 ரன்), சுப்மன் கில் (14 ரன்) ஆகியோர் அன்ரிச் நோர்டியா பந்து வீச்சில் போல்டு ஆனார்கள். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னில் சர்ப்ராஸ் கானுக்கு மாற்று வீரராக களம் இறங்கிய கலீல் அகமது பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரெலிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அந்த அணி 54 ரன்னுக்கு (6 ஓவரில்) 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலில் ஜோஷ் லிட்டிலுக்கு மாற்று வீரராக களம் கண்ட விஜய் சங்கர், சாய் சுதர்சனுடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 107 ரன்னாக உயர்த்திய போது விஜய் சங்கர் (29 ரன்) மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து டேவிட் மில்லர் வந்தார். 18.1 ஓவர்களில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது அரைசதம் அடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 62 ரன்களுடனும் (48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 31 ரன்களுடனும் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். குஜராத் அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். டெல்லி அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.