சென்னை, யானைக்கவுனி பகுதியில் தனியார் மணி எக்சேஞ்ச் நிறுவன ஊழியரிடம் ரூ. 50 லட்சம் வழிப்பறி செய்த சக ஊழியர் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து, ரொக்கம் ரூ.23.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வல்லம், மேலமையூர் அஞ்சல், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (55). எழும்பூர் பகுதியில் உள்ள தனியார் Money Exchange நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று (17.03.2023) மாலை 6.30 மணியளவில் தனது நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினரிடமிருந்து ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அதனை கொத்தவால் சாவடியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக சென்றார். அப்போது அவருடன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர் காஜா மொய்தீன் என்பவரும் சென்றார். இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வால்டாக்ஸ் ரோடு, யானைகவுனி தெரு, பெருமாள் கோயில் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ஜாகீர் உசேன் மற்றும் காஜா மொய்தீன் மீது ஸ்பிரே அடித்து அவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ஜாகீர் உசேன் யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவயிடத்தில் தீவிர விசாரணை நடத்தியதில் அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் அழைப்புக்கள் மூலம் துப்பு துலங்கியது. ஜாகீர் உசேனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த சக ஊழியர் காஜா மொய்தீன் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு நாடகமாடியது தெரியவந்தது. அதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த காஜா மொய்தீன் (45), ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ்குமார் (38), அஜித் குமார் (எ) அஜய் (29) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.23.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் 3 குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.