Take a fresh look at your lifestyle.

சென்னையில் ஒரே நாளில் 609 ரவுடிகளிடம் நேரில் விசாரணை: கமிஷனர் சங்கர்ஜிவால் கிடுக்குப்பிடி நடவடிக்கை

40

சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் (DARE), கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 609 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, 8 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரவு சிறப்பு வாகனத் தணிக்கையில் 133 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் (HS Rowdy elements), கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மற்றும் இரவு சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ள கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (01.04.2023) ஒரு நாள் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டனர்.

சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (HS Rowdies) எதிரான சோதனையில் 609 குற்றவாளிகள் நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே, 389 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு, 2,517 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றுள்ள நிலையில், நேற்றைய (01.04.2023) சிறப்பு சோதனையில், 7 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெற ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதே போல, கொலை முயற்சி வழக்கு அல்லது 2க்கும் மேற்படி அடிதடி வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான சோதனையில், 1 குற்றவாளியிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே 585 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலும் உள்ளனர்.
மேலும், நேற்று (01.04.2023) இரவு சென்னை பெருநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6,778 வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 42 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றம் 03 இலகுரக வாகனங்கள் என 47 வாகனங்களும், உரிய ஆவணங்கள் இல்லாத மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 81 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 ஆட்டோக்கள் என 85 வாகனங்களும் என மொத்தம் 132 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாஹன் செயலி (Vaahan APP) மூலம் 677 வாகனங்கள் சோதனைகள் மேற்கொண்டு, ஆவணங்கள் மற்றும் வாகனங்களின் பதிவு எண்கள் சரி பார்க்கப்பட்டதில் சந்தேகத்திற்கிடமான 1 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆக மொத்தம் நேற்று (01.04.2023) இரவு நடைபெற்ற சிறப்பு சோதனையில் மொத்தம் 133 வாகனங்கள் பறிமுதல் செய்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் காணும் FRS செயலி மூலம் 4,407 நபர்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டு 5 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரித்துள்ளார்.