Take a fresh look at your lifestyle.

60 நாட்களில் ரூ. 7.5 கோடி அபராதம் வசூல்

36

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் கடந்த 60 நாட்களில் ரூ. 7.5 கோடி அபராதம் வசூலித்து சென்னைப் பெருநகர போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் மோட்டார் வாகனச் சட்டம் தீவிரமாக அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அதன்படி சாலை சந்திப்புக்களில் போக்குவரத்துப் போலீசார் மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ப்ரீத்திங் அனலைசர் கருவி மூலம் உறுதி செய்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்துவதில்லை. நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபராதம் செலுத்துவதில் அலட்சியம் செய்கின்றனர். இதனால் 7,752 மதுபோதையில் வாகனம் ஓட்டிய அபராத வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன.

அதனை களைவதற்கு சென்னை பெருநகரில் 10 இடங்களில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 25ம் தேதியன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 775 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 80,35,500- விதி மீறியவர்களால் செலுத்தப்பட்டன. மேலும் கடந்த 2 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 7,286 மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 7,53,97,000- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 359 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.