Take a fresh look at your lifestyle.

இந்தியாவிலேயே முதன்முறையாக ரவுடிகளை வளைக்க புது ஆக்சன் – போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பேட்டி

39

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை நகரம் முழுவதும் ‘ஆளில்லா கண்காணிப்பு குட்டி விமானங்கள்’ ரோந்துப் பணி மற்றும் ரவுடிகளை வளைக்கும் ‘பருந்து செயலி’ உள்ளிட்ட பல்வேறு நவீன திட்டங்கள் சென்னை நகர காவல்துறையில் செயல் படுத்தப்படவுள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

சென்னை நகர காவல்துறையில் மகிழ்ச்சி, ஆனந்தம், கிளாப் செயலி, சிற்பி, பறவை, காவல் கரங்கள் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அது தவிர இன்னும் பல்வேறு நவீன திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக கமிஷனர் சங்கர்ஜிவால் நிருபர்களிடம் தெரிவித்தார். அது தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் விவரித்த விஷயங்கள்:

சென்னை நகரைக் கண்காணிக்க 9 ட்ரோன்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை, அடையாறு பெசன்ட் அவென்யூவில் “வானேவி காவல் அலகு” எனப்படும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் சென்னைப் பெருநகரை கண்காணிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. கண்காணிப்பு ட்ரோன்கள் 6, ஹெவி லிப்ட் மல்டிரோட்டர் ட்ரோன் 1, லாங் ரேஞ்ச் சர்வே விங் ட்ரோன் 2 என மொத்தம் 9 டிரோன்கள் வர உள்ளன. செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கொண்ட இந்த ட்ரோன்கள் தரையில் இருந்து 5-10 கிமீ தூரம் வரை இயக்க முடியும். திருவிழாக்கள், பொதுக்கூட்டங்களின் போது அவற்றைத் துல்லியமாக மதிப்பிடவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அங்கு நடமாடும் சமூக விரோதிகளையும் துல்லியமாக அடையாளம் காண இது பெரிய அளவில் காவல்துறைக்கு உதவி புரிகிறது. மேலும் இவை ANPR நவீன கேமராக்களுடன் பொருத்தப்படும். எனவே, அவை சந்தேகத்திற்கிடமான, திருடப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் அடையாளம் காணும் திறன் கொண்டவை. தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்ட ஹெவி லிப்ட் ட்ரோன் இரவில் கூட லைப் ஜாக்கெட்டைப் பயன்படுத்துவதன் மூலம் கடல் அலைகளில் சிக்கியவர்களை அடையாளம் கண்டு மீட்க முடியும்.

பருந்து செயலி

ரவுடிகளை கண்காணிக்க ரூ. 32.60 லட்சம் செலவில் ரவுடிகள், சமூக விரோதிகளை கண்காணிப்பதற்கு ‘பருந்து’ எனப்படும் செயலி உருவாக்கப்படவுள்ளது. இதில் ரவுடிகளுடன் தொடர்புடையவர்களின் தகவல், அவர்களின் வழக்கு வரலாறு, வழக்கு மற்றும் தொடர்புடைய குற்றவாளிகளின் தற்போதைய நிலை ஆகியவை உள்ளன. இந்த செயலில் இருந்து ஒட்டு மொத்த தரவுத்தளத்திலிருந்து குறிப்பிட்ட குற்றவாளியை எளிதாக வரிசைப்படுத்தவும், குற்றவாளியின் வரலாறு மற்றும் அவரது சிறை நிலையை அறிய உதவும் அம்சங்களுடன் பயன்பாடு உருவாக்கப்படும். மொபைல் அப்ளிகேஷன் மூலம் குற்றவாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களின் சிறை நிலையைப் பார்க்க காவல்துறை அதிகாரிகளுக்கு இது உதவுகிறது.

அதே போல சைபர்கிரைம் எச்சரிக்கை செயலி ஒன்று ரூ. 29.97 லட்சம் செலவில் உருவாக்கப்படவுள்ளது. தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்குகள், UPI ஐடிகள். சமூக ஊடக் கணக்குகள், மின்னஞ்சல் ஐடிகள், வாலட் ஐடிகள் மற்றும் இணையதள URLகள் போன்ற மோசடி செய்பவர்களின் விவரங்கள் இந்த செயலியில் உள்ளிடப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை இது அந்த குற்றங்களின் அடிப்படையில் பட்டியலிட்டு தக்க நடவடிக்கை எடுக்க உதவும். மேலும் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (IVMR) செயலி, போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புச் செயலி, பீச் பகி என அழைக்கப்படும் ஆகிய 5 திட்டங்கள் சென்னை நகர காவல்துறையில் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியின் போது சென்னை நகர கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அன்பு, மகேஷ்வரி, கபில்குமார் சரத்கர், இணைக்கமிஷனர்கள் சிபிச்சக்கரவர்த்தி, ரம்யாபாரதி, திஷாமிட்டல், மயில்வாகனன், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர் சக்திவேல், மக்கள் தொடர்பு உதவிக்கமிஷனர் விஜய்ராமுலு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.