Take a fresh look at your lifestyle.

முதல் வாசிப்பு – மகேந்திரன், துணை ஆணையர், அடையாறு, சென்னை.

83

‘எழுத்துக் கூட்டி வாசி’ என்று எனது ஆரம்பப்பள்ளி ஆசிரியை சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. அ… ணி…. ல்… அணில் என்று வாசித்துவிட்டு அவர் முகம் பார்க்கும்போது மனதில் ஒரு பெருமிதம் பொங்கும். இன்றைய அம்மா, ஆடு….’ அப்போது இல்லை. அணில்,ஆடு,இலை…என்று தான் இருந்தது.

பள்ளியில் ‘ எழுத்துக் கூட்டி’ வாசிக்கும் கலையில் பெறுகின்ற அன்றாட பயிற்சியோடு ஊர் வாசக சாலைக்குச் செல்வோம். அங்கு சில பெரிசுகள் அறுபது எழுபது வயதிலும் எழுத்தைக் ‘ கூட்டிக்கொண்டிருக்கும்’.வாசித்துக்கொண்டே தூக்கத்தில் நுழையும் அவர்கள் கையிலிருந்து நழுவும் செய்தித்தாளைப் பெறக்காத்திருப்போம். கிடைத்ததும் எங்களின் சின்னக்கைகளில் ஆளுக்கொரு பக்கம் பிடித்து வாசிப்போம்.எங்களின் கண்கள் ‘ டார்ஜான்’, ‘மந்திரவாதி மாண்ட்ரேகு’ போன்றவற்றில் நிற்கும்…இடையே சில சினிமா விளம்பரங்களைப் பார்த்து வாசிக்கத் தூண்டும்.

இதையடுத்து மிகப் பெரியதாக வாசிக்கத் தூண்டிய சமாச்சாரம் என்றால் அது சினிமாப்பாடல் புத்தகங்கள்தான்.அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும்.சிவாஜியின் நூறாவது படம் என்ற பெரிய விளம்பரத்தோடு திரிசூலம் வந்த நாட்கள் அது. திரிசூலம் பாட்டுப் புத்தகத்தைக் கையிலேயே வைத்துத் திரிந்தோம்.” மலர் கொடுத்தேன்…கைகுலுங்க வளையலிட்டேன்…” இது தான் முதலில் பாடம் செய்த’ மனப்பாடப்பாட்டு’.அன்றைய தலைமுறைக்கு வாசிப்பைப் பழக்கியதில் இந்த பாட்டுப்புத்தகங்களின் பங்கு பெரியது.

அம்புலிமாமா போன்ற புத்தகங்களும் படக்கதையாக வந்த காமிக்ஸ் புத்தகங்களும் வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு சொன்ன கதைகளுமாக மனதை நிறையவே கற்பனையில் சஞ்சரிக்கச் செய்தன.கூடவே மயில் ராவணன் கதை,நல்தங்காள் கதை போன்ற வாய்வழிக் கதைகள் வேறு.
குமுதமும் ஆனந்தவிகடனும் மெல்ல மெல்ல சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் அறிமுகப்படுத்தின.

மதன் போன்றோரின் ஜோக்…ஓவியங்கள் சிரிப்பூட்டியதோடு ஹெல்மெட்,ஆன்டெனா, டிராபிக் சிக்னல் …என கிராமங்களில் நாங்கள் பார்த்திராத பலவற்றை அறிமுகப்படுத்தின.

வளர வளர மெல்ல நாவல் புதினம் என வாசிப்புத்தளம் விரிந்தது.ஜெயகாந்தன்,புஷ்பா தங்கதுரை,ராஜேஷ்குமார்,ராஜேந்திரக்குமார்,சிவசங்கரி,என்று பலரும் அறிமுகமானார்கள்.பாக்கெட் நாவல் என்ற ஒரு வகை திடீரென ஒரு அலையாக வீசி மறைந்தது.

ஜூனியர் விகடனில் வந்த கிரா வின் ” கரிசல்காட்டு கடுதாசி ” எழுதிவதிலும் வாசிப்பதிலும் ஒரு புதிய திசையைக் காட்டியது.தொடர்ந்து அவர் படைப்புகளைத் தேடச் செய்தது.

தேடல் தொடர்கிறது…
இன்று அது எழுதவும் தூண்டிவிட்டது.
வாசிப்பு என்பது ஒரு அனுபவப் பயணம்.

சமையலில் களி,கேசரி,அல்வா போன்றவற்றைச் செய்யும்போது ‘ கட்டி சேராமல் கிண்டுவது’ என்பார்கள்.மனித சிந்தனை என்னும் செயல்பாட்டில் வாசிப்பு நிகழ்த்துவது இதைத்தான்.தொடர்ந்து வாசிப்பதே தெளிவான சிந்தனையை உத்திரவாதப்படுத்தும்.எண்ணங்களில்’ கட்டி சேராமல்’ காக்கும்.

இன்று உலக புத்தக தினம்.
வாசிப்பில் வளம் பெறுவோம்.