டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதானிக்காக பல்வேறு சட்டங்கள் வளைக்கப்பட்டுள்ளன. மோடி, அதானி இடையிலான தொடர்பு குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். என்னை பேச விடாமல் தடுத்தனர். 20 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, அதானிக்கு எங்கிருந்து பணம் வந்தது, யார் பணம் கொடுத்தது? பல போலி நிறுவனங்கள் மூலம் குழும முறைகேடுகள் நடந்துள்ளன. சீன நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது.
மேலும் அதானி குறித்து பேசுவதை தடுக்க பார்க்கின்றனர். எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது, நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன். இந்தியாவை இழிவுப்படுத்தவில்லை. அதானி குறித்து பேசியபோது பிரதமர் கண்களில் அச்சத்தைப் பார்த்தேன். அடுத்து என்ன பேசப் போகிறேனோ என்று அஞ்சுகின்றனர்.
சபாநாயகருக்கு நான் அனுப்பியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை. எனது தொகுதியான வயநாடு மக்களுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். என்மீது இந்த தேச மக்கள் அன்பும், மதிப்பும் வைத்துள்ளனர். அவர்களிடம் நியாயம் கேட்பேன். பிரதமர் மோடியை பார்த்து பயப்பட மாட்டேன். சிறை செல்லவும் அஞ்ச மாட்டேன். பதவியை பறித்து விட்டதால் நான் அமைதியாக இருக்க முடியாது. எதிர்கட்சிகள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் போட்டியிட அனுமதிக்காவிட்டாலும் தொடர்ந்து பணியாற்றுவேன். நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல.
பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் பொய்களை பேசி வருகின்றனர். நான் கேள்வி கேட்பதை அவர்கள் தடுக்க முடியாது. நான் தொடர்ந்து உண்மைக்காக குரல் கொடுப்பேன். இவ்வாறு ராகுல் கூறினார். மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
கடந்த 2019 ம் ஆண்டு ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் மாநிலத்தின் சூரத் நீதின்றம் அளித்த உத்தரவின்படி 2 ஆண்டு சிறை தண்டனையை ராகுல் காந்தி அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு 30 நாள் அவகாசம் ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.