ரூ. 71 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்டுக் கொடுத்த சைபர்கிரைம் எஸ்ஐக்கு நட்சத்திர காவல் விருது: கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்
கடந்த பிப்ரவரி மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000- வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில் கடந்த பிப்ரவரி -2023 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு சென்னை அடையாறு காவல் மாவட்ட சைபர்கிரைம் உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை நேரில் அழைத்த கமிஷனர் சங்கர்ஜிவால் பிப்ரவரி மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000- வழங்கி கவுரவித்தார்.
ஜெயபாலாஜி அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி, காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்கள் தொடர்பான வழக்குகளில் மிக தீவிரமாக பணியாற்றி ரூ. 71,79,778 மதிப்புள்ள 550 செல்போன்களை கண்டுபிடித்ததின்பேரில், அவற்றை கைப்பற்றி, உரியவர்களிடம் ஒப்படைக்க உதவி புரிந்துள்ளார். மேலும், சைபர் மோசடி வழக்கில் புகார்தாரர் இழந்த ரூ. 7,00,000- பணத்தை மீட்டு அவரது வங்கி கணக்கிற்கு பெற்றுத் தந்துள்ளார். மேலும், அடையாறு காவல் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளின் விவரம், இருப்பிடம் கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்ய உதவியாக இருந்துள்ளார். இதற்காக இவருக்கு நட்சத்திர விருது வழங்கப்பட்டுள்ளது.