சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை நகர கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அன்பு ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தோழி, சினேகிதி, சகோதரன், நிறங்கள் உள்ளிட்ட திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் திருநங்கைகள் என சுமார் 65 திருநங்கைகள் கலந்து கொண்டனர். திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நல்வழிபடுத்தி அவர்களது வாழ்வாதாரம், மாற்றுத் தொழிலுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வரும் திருநங்கைகளுக்கு அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி திட்ட இயக்குநர் கண்ணன் மற்றும் The Apparel Training & Design Centre மண்டல உதவி மேலாளர் எவரெஸ்ட் ஆகியோர் திருநங்கைகளுக்கான மாற்றுத் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து கருத்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணைக்கமிஷனர் வனிதா, கூடுதல் துணைக்கமிஷனர் அண்ணாதுரை மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.