Take a fresh look at your lifestyle.

சிறந்த காவல் பணிபுரிந்த 10 போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு

48

சென்னை பெருநகர காவல் துறையில் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த காவல் பணி செய்யும் போலீசார் மற்றும் நேர்மையான செயலில் ஈடுபடும் பொதுமக்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். அந்த வகையில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மையாக செயல்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 11 நபர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று (31.03.2023) நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

1. மடிப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சசிகுமார் கடந்த 30.03.2023 அன்று தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு 200 வழக்குகள் பதியப்பட்ட டாடா ஏஸ் வாகன உரிமையாளரிடம் இருந்து அபராத தொகை ரூ.32,500/- ஐ வசூல் செய்து, மேலும் நிலுவையில் இருந்த 412 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் 37 வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகை ரூ.75,700/- வசூல் செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.

2. இருசக்கர வாகன திருடர்களை இரவு ரோந்தில் மடக்கிப் பிடித்த கிண்டி எஸ்ஐ

கிண்டி காவல் நிலைய தலைமைக்காவலர்கள் ரமேஷ்குமார், கலையரசன் மற்றும் காவலர் அரவிந்த் ஆகியோர் கடந்த 30.03.2023 அன்று இரவு ரோந்து அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிண்டி, சக்தி அவென்யூ பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்த முற்பட்ட போது, அவர்களை தப்பியோடவே, மேற்படி 2 நபர்களையும் மேற்படி காவல்குழுவினர் மடக்கி பிடித்து, கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் மேற்படி பிடிபட்ட நபர்கள் பரங்கிமலை தினேஷ் (20), வடபழனி அப்துல்செரீப் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே S-1 புனித தோமையர் மலை காவல்நிலைய எல்லையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் மேற்படி 2 நபர்கள் மீது, J-3 கிண்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

3.திருவான்மியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை மடக்கி பிடித்த காவல் குழுவினர்:

திருவான்மியூர் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.மாசிலாமணி (த.கா.44003) மற்றும் காவலர் கமலகண்ணன் (கா.55171) ஆகியோர் கடந்த 18.03.2023 அன்று இரவு ரோந்து அலுவலில் ஈடுபட்டிருந்தபோது, திருவான்மியூர் பேருந்து டிப்போ அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்த முற்பட்ட போது, ஒருவர் தப்பியோடவே, மற்றொரு நபரை மடக்கி பிடித்து, J-6 திருவான்மியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் மேற்படி பிடிபட்ட நபர் சந்தோஷ், வ/19, திருவல்லிகேணி, சென்னை என்பதும் மேற்படி சம்பவயிடத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த டியோ இருசக்கர வாகனம் H-6 ஆர்.கே நகர் காவல் நிலைய எல்லையில் திருடியது தெரியவந்ததின்பேரில் மேற்படி எதிரி சந்தோஷ் என்பவர் மீது, J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, எதிரி சந்தோஷை சிறையில் அடைத்தனர்.

4. எழும்பூர் நீதிமன்றத்தில் தப்பியோடிய குற்றவாளியை மடக்கி பிடித்த காவல்குழுவினர்:

கடந்த 29.03.2023 அன்று எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில், நீதிமன்ற விசாரணைக்கு வந்த குற்றவாளி ஒருவர், விசாரணை முடியும் முன்னரே, தப்பியோட முயற்சி செய்தபோது, அங்கு பணியில் இருந்த V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.கார்த்திகேயன், (த.கா.27047), காவலர்கள் சக்திவேல் (கா.55460) மற்றும் மதன்குமார் (கா.60623) ஆகியோர் மேற்படி குற்றவாளியை மடக்கி பிடித்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் இது தொடர்பாக F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

5. சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல்நிலை பெண்காவலர்:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் (CAWC) பணிபுரிந்து வரும் முதல்நிலை பெண் காவலர் ஈஸ்வரி (பெ.மு.கா.36634) என்பவர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று, போக்சோ சட்டம், மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகளை கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடம் சிறப்பாக ஏற்படுத்தி வருகிறார்.

6. மதுரவாயல் பகுதியில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து, நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் ஆட்டோ ஓட்டுநர்:

கடந்த 22.03.2023 அன்று இரவு மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அப்பல்லோ சிக்னல் அருகே ஆட்டோ ஓட்டுநர் திருமதி.சுமதி என்பவர் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு முன்புறம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபரிடம் இருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுகள் சாலையில் கீழே விழுந்தது. இதை பார்த்த சுமதி உடனே சாலையில் கிடந்த இரண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து, நேர்மையாக மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மையாக செயல்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 11 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (31.03.2023) நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.