ரோட்டில் கிடந்த 500 ரூபாய் கட்டுக்களை நேர்மையான காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் ஆட்டோ டிரைவரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கடந்த 22.03.2023 அன்று இரவு மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அப்பல்லோ சிக்னல் அருகே ஆட்டோ ஓட்டுநர் சுமதி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்புறம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபரிடம் இருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுக்கள் சாலையில் கீழே விழுந்தது. இதை பார்த்த சுமதி உடனே சாலையில் கிடந்த இரண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து, நேர்மையாக மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சுமதியின் இந்த நேர்மையான செயலை பார்த்து வியந்த போலீசார் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து கமிஷனர் சங்கர்ஜிவால் ஆட்டோ டிரைவர் சுமதியை நேரில் அழைத்து அவரது நேர்மைக்காக நற்சான்றிதழ் வழங்கி அவரைப் பாராட்டினார்.