16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலிக்கு பதிலாக ரஹானே, சிசாண்டா மகாலாவும், மும்பை அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், நேஹல் வதேராவுக்கு மாற்றாக ஜாசன் பெரன்டோர்ப், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் ஆகியோர் விளையாடினர். ‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார்கள். ரோகித் சர்மா 21 ரன்னில் துஷர் தேஷ்பாண்டே பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து கேமரூன் கிரீன் வந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் திரட்டியது. அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்ததுடன் விக்கெட்டையும் வீழ்த்தினர். அடித்து ஆடிய இஷான் கிஷன் 32 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் (1 ரன்) மிட்செல் சாண்ட்னெர் பந்து வீச்சை லெக்சைடில் ஸ்வீப் ஷாட் ஆட முயற்சித்து விக்கெட் கீப்பர் டோனியிடம் சிக்கினார். அந்த பந்தை நடுவர் ‘வைடு’ என்று அறிவித்தார். ஆனால் டோனி நடுவரின் முடிவை எதிர்த்து தயக்கமின்றி அப்பீல் செய்தார். ரீபிளேயில் பந்து பேட்டில் உரசியது தெரியவந்ததால் நடுவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவுட் என்று அறிவித்தார். டோனியின் இந்த துரிதமான அப்பீலை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
இதனையடுத்து கேமரூன் கிரீன் (12 ரன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சிலும், அர்ஷத் கான் (2 ரன்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சிலும் அவுட் ஆனார்கள். அடித்து ஆடிய திலக் வர்மா (22 ரன்) விக்கெட்டையும் ரவீந்திர ஜடேஜா காலி செய்தார். சிசாண்டா மகாலா பந்து வீச்சில் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (5 ரன்) அடித்த பந்தை எல்லைக்கோட்டு அருகில் துள்ளிப்பிடித்த பிரிட்டோரியஸ் நிலைதடுமாறி பவுண்டரி எல்லைக்கு வெளியே போய் விழுந்தார். அதற்குள் அவர் சமயோசிதமாக மைதானத்துக்குள் தூக்கி போட்ட பந்தை ருதுராஜ் கெய்க்வாட் கச்சிதமாக கேட்ச் செய்தார். ஐ.பி.எல். போட்டியில் சிசாண்டா கைப்பற்றிய முதல் விக்கெட் இதுவாகும். வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே வீசிய ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் தூக்கிய டிம் டேவிட் (31 ரன்கள், 22 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அதே ஓவரில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. ஹிருத்திக் ஷோகீன் 18 ரன்களுடனும், பியுஷ் சாவ்லா 5 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், சிசாண்டா மகாலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 158 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட டிவான் கான்வே (0) முதல் ஓவரிலேயே ஜாசன் பெரன்டடோர்ப் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் கைகோர்த்தார். வழக்கமாக மிதவேகத்தில் ஆடக்கூடிய ரஹானே அதிரடியில் கலக்கி அனைவரையும் வியக்க வைத்தார்.
பெரன்டோர்ப் பந்து வீச்சில் சிக்சர் தூக்கிய ரஹானே வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் வீசிய ஒரு ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்தார். பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டிய ரஹானே 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நடப்பு ஐ.பி.எல்.தொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைசதம் இதுவாகும். ரஹானே 61 ரன்னில் (27 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஷிவம் துபே (28 ரன்கள், 26 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) குமார் கார்த்திகேயா பந்து வீச்சில் போல்டு ஆனார். 18.1 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.