சென்னை நகரில் 19.03.2023 மற்றும் 20.03.2023 ஆகிய தேதிகளில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டையில் 4 இடங்களில் 154 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் போலீசார் அந்தந்த துணைக்கமிஷனர்கள் நாள்தோறும் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டையில் 21 கிலோ
வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று (19.03.2023) மூலக் கொத்தலம் சிக்னல் அருகில் அங்கு சந்தேகத்தின் பேரில் 3 நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது உள்ளே 21 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திரா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சோமராஜ் (எ) பாபாய் (37), கந்தேரி சிட்டிபாபு (35), சின்ன சுப்பாய் (55) ஆகிய மூவரையும் கைது செய்தனர். விசாரணையில் மூவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மயிலாப்பூரில் 45.1 கிலோ
மைலாப்பூர் காவல் மாவட்ட தனிப்படை போலீசார் பொறி வைத்து நடத்திய வேட்டையில் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 55) என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று (19.03.2023) மைலாப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் கண்காணித்தனர். அப்போது 5.1 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பீரவின்குமார் (30) என்பவரை கைது செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான மற்றொரு குற்றவாளியை தேடிவருகின்றனர். பிரவீன்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோயம்பேட்டில் 80 கிலோ
சென்னை, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இன்று (20.03.2023) காலை
கோயம்பேடு, கீரை மார்க்கெட் அருகில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த ஆந்திரா காக்கிநாடாவைச் சேர்ந்த பண்டாரகுமார் பாபு (வயது 25) என்பவரது பையை சோதனையிட்ட போது அதற்குள் 80 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் பண்டாரபாபு ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி மூலம் அந்த கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
மாதவரத்தில் 8 கிலோ
மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று (19.03.2023) இரவு, மாதவரம் ரவுண்டானா அருகில் கஞ்சாவுடன் நின்றிருந்த உபியைச் சேர்ந்த முகமது சல்மான் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. உபியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்காக கஞ்சா கடத்திச் செல்லும் போது அவர் போலீசில் பிடிபட்டது தெரியவந்தது. இந்த வகையில் இன்றும் நேற்றும் சென்னை போலீசார் நடத்திய கஞ்சா வேட்டையில் மொத்தம் 114 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.