Take a fresh look at your lifestyle.

நூதன மோசடி நைஜீரிய கும்பலை மும்பையில் கைது செய்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

61

ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய கமிஷன் தருவதாக ரூ. 33 லட்சத்தை ஆன்லைன் மூலம் நூதன முறையில் ஏப்பம் விட்ட நைஜீரிய கும்பலை சென்னை சைபர்கிரைம் போலீசார் மும்பையில் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக குறை தீர்ப்பு முகாமில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘நைஜீரியா நாட்டை சேர்ந்த நேராரமோரிசன் என்ற பெயரில் ஒரு நபர் உள்ளிட்ட சிலர் என்னை LINKEDIN என்ற இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு இந்தியாவில் இருந்து ‘MONOTROPA UNIFLORA’ என்ற ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய ஒரு வணிக கூட்டமைப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். பின்னர் மூலப்பொருட்கள் வாங்குவதற்கும் உதவி செய்வதாக கூறிய அவர்கள் அதற்கு கமிஷன் தருவதாகவும் தெரிவித்தனர். அதனை நம்பிய நான் ரூ. 33 லட்சத்து 30 ஆயிரத்தை அந்த நைஜீரிய நபர்கள் சொன்ன இரண்டு வங்கி கணக்குகளில் எட்டு பணப்பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்தேன். ஆனால் அதற்கு எனக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் ரூ. 33 லட்சம் பணம் என்னிடம் நூதனமான முறையில் மோசடி செய்யப்பட்டதை அறிந்தேன். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தரவேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசுக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மகேஷ்வரி மேற்பார்வையில் சைபர்கிரைம் பிரிவு போலீசார் கூடுதல் துணை ஆணையர் சாஜிதா தலைமையில் ஆள் மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். இதில் நைஜீரிய கும்பல் மும்பையிலிருந்து இணையளதளம் மூலம் இந்த மோசடியை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மும்பையில் தங்கியிருந்து கும்பலாக செயல்படுவது தெரியவந்தது.

அதனையடுத்து தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று அங்கு கார்கர் ஏரியாவில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா (32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இமானுவேல் (32), எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோசடி குற்றத்திற்கு பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்கள், வங்கி கணக்கு அட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு நடத்திய புலன் விசாரணையில் நைஜீரியர்கள் மும்பையில் தங்கியிருந்தபடி LINKEDIN என்ற சமூக வலைதளம் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு ஆயுர்வேத ஆயில் சப்ளை கமிஷன் என்ற போர்வையில் முதலீடு செய்தால் கமிஷன் தருவதாக பேசி போலியான ஆயுர்வேத மூலப்பொருட்களை அனுப்பி ஆசை காட்டி நம்ப வைத்து, பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது சிறிதாக பணம் கட்டச் சொல்லி பணத்தை பெற்று மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்தது.

கூடுதல் ஆணையர் மகேஷ்வரி எச்சரிக்கை

‘‘இணையதளங்கள் மூலம் வியாபாரம் தொடங்கும் முன்பு அவர்களது உண்மைத்தன்மை குறித்து தீர விசாரித்து செயல்பட வேண்டும். விசாரிக்காமல், அறிமுகம் இல்லாத நபர்களுக்கும், வியாபாரத்திற்கும் பணம் அனுப்ப வேண்டாம். ஆசை வார்த்தைகளை நம்பி பொமக்கள் ஏமாறாதீர்கள்’’ சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.