Take a fresh look at your lifestyle.

BLUK SMS அனுப்பி மெகா மோசடி: டில்லி மோசடி கும்பலை வளைத்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

30

குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் லோன் தருவதாக பல நபர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அதன் மூலம் பண மோசடி செய்வதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நபர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும் சிறுக சிறுக ரூபாய் 2,43,650 -பணத்தை அந்த நபர்ளிடம் கொடுத்து ஏமாந்தது தொடர்பாக வந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாக தென்சென்னை சைபர்கிரைம் போலீசார் ஆள்மாறாட்டம், மோசடி, இணைய வழியில் ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கும்பல் டில்லியில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் டில்லி விரைந்து சென்று ரகுபீர் நகரில் தங்கியிருந்து நோட்டமிட்டனர்.

BLUK SMS அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன் (29), துரைமுருகன் (24), ராஜேஷ் (33) ஆகிய 3 நபர்களை கடந்த 20ம் தேதியன்று புதுடில்லியில் வைத்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், வங்கி கணக்கு அட்டைகள், காசோலை புத்தகம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பணம் ரூ. 1,50,000- ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரையும் சென்னைக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தி 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

3 பேரும் டெல்லியில் தங்கி இருந்து கொண்டு குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் லோன் தருவதாக BLUK SMS அனுப்பி அவர்களை தொடர்பு கொள்ளும் நபர்களை ஆசை வார்த்தைகள் காட்டி நம்ப வைத்து பல்வேறு காரணங்களை கூறி சிறுக சிறுக பணம் பின்பு கட்டச் சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றியது போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது.

கமிஷனர் சங்கர்ஜிவால் அறிவுரை

எனவே குறுஞ்செய்திகள் மூலம் வரும் தகவல்களை உண்மை என நம்பி மக்கள் தங்களது பணத்தை யாருக்கும் அனுப்பக்கூடாது. நேரில் பார்க்காமலும் விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.