தமிழகத்தில் பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான தமிழகம் முழுவதும் நடந்த 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.
தமிழக காவல்துறையில், பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்படி சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கு முதற்கட்டமாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது கட்டமாக வேலை வாய்ப்பு வழங்க இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து வேலை வாய்ப்பு முகாம்கள் (2.0) நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கடந்த 18.03.2023 அன்று, வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில், சென்னை தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியளார்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் (2.0) துவக்கி வைத்தார். இதே போன்று தமிழகத்தில் கோயம்புத்தூர், ஓசூர், வேலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் சீருடை பணியார்கள் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான 2 வது கட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் (2.0) கடந்த 18.03.2023 முதல் 26.03.2023 வரை நடத்தப்பட்டது.
சென்னையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் (18.03.2023) மற்றும் (19.03.2023) ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இவ்வேலை வாய்ப்பு முகாமில், முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. சென்னையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மேற்படி சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியார்கள் என 853 நபர்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 2,451 நபர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடமிருந்து சுய விவரங்கள் பெறப்பட்டு கல்வி தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுகள் மற்றும் இறுதிக்கட்ட தேர்வுகள் நடத்தி, தமிழகம் முழுவதும் மேற்படி சீருடைப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் குடும்பத்தைச்சேர்ந்த வாரிசுகள் மற்றும் துணைவியர்கள் 613 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று (01.04.2023) மதியம் 3.30 மணியளவில் வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு, மேற்படி தனியார் நிறுவனங்களால், தமிழகம் முழுவதும் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்கள் என 613 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் சைலேந்திரபாபு ஆற்றிய உரையில் கடந்த 2021 ம் ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 800க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலையில் சேர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வருகின்றனர் எனவும், தற்போது 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 613 நபர்கள் தங்களது அறிவு திறன், தொழில் திறன் மற்றும் நல்ல மணப்பான்மைகளையும் வளர்த்து கொள்ளவேண்டும். மேலும் உலகளவிலான தகவல்களை அதிகளவில் தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி திறைமைகளை வளர்த்து கொள்ள வேண்டும், தற்போது கிடைத்துள்ள வேலைவாய்ப்பு சிறிய அளவிலானது என எண்ணாமல் அதில் தொடர்ந்து பணியாற்றி திறைமைகளை வளர்த்து மேன்மேலும் உயர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்களை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து வேலை வேலை வாய்ப்புகளை வழங்கிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பினருக்கு (CII) நன்றிகளை தெரிவித்தார். மேலும் 7 தனியார் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளையும், சிறப்பாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்திய 12 காவல் அதிகாரிகளையும் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
6 இடங்களில் நடைபெற்ற 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் மேலும் 1,113 நபர்கள் இறுதிக்கட்ட தேர்வுகளுக்காக தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகள் துறை ஆணையாளர் வீரராகவலு, சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன், வடக்கு மண்டல ஐஜி டாக்டர் கண்ணன், இணை ஆணையாளர் சாமூண்டீஸ்வரி, வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்து சாமி, AIG Welfare ராமகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையாளர்கள் மகேந்திரன், (அடையார்), இராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), பொன்னுசாமி, CII, மணி, FICCI, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குடும்பத்தினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.