சென்னை, செம்பியம் பகுதியில் முன்விரோதம் அதிமுக பகுதிச் செயலாளரை கொலை செய்த சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடி, கக்கன்ஜி காலனி, பி-பிளாக், ராணி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 47). நேற்று முன்தினம் (27.03.2023) இரவு 10.20 மணியளவில் அம்மன் கோயில் தெரு, ராணியம்மை தெரு சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த 5 பேர் கும்பல் மேற்படி இளங்கோவனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் இளங்கோவன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து கொலையுண்ட இளங்கோவனின் மனைவி சுமலதா என்பவர் புகாரின் பேரில் செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதனையடுத்து இந்த கொலை தொடர்பாக வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த சஞ்சய் (19), கணேசன் (23), வெங்கடேசன் (30), அருண்குமார் (28) ஆகிய 4 பேரை செய்தனர். மேலும் 17 வயது இளஞ்சிறார் ஒருவரும் பிடிப்பட்டார். அவர்களிடமிருந்து 5 கத்திகள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கொலையுண்ட இளங்கோவன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட சஞ்சயை கோவில் திருவிழாவின் போது அவர்களது நண்பர்கள் முன்னிலையில் தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு மேற்படி இளங்கோவனை கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கணேசன் செம்பியம் காவல் நிலையம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட 4 நபர்கள் நீதிமன்றத்திலும், இளஞ்சிறார் சிறுவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.