Take a fresh look at your lifestyle.

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

60

அதிமுக பாஜ கூட்டணி தொடர்கிறது என்று இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டசபை வளாகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது, ‘‘தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம், விற்பனை தாராளமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. போலீஸ் டிஜிபி, கஞ்சா ஆபரேஷன் என்று அறிவித்தார். அது அறிவிப்போடு முடிந்து விட்டது. போதைப்பொருளை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து கொலை, கொள்ளைகள் நடைபெறுகிறது. நாளுக்கு நாள் பதட்டம் அதிகரிக்கிறது. சட்டசபை கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்போதே எங்களது கட்சியின் பகுதி செயலாளர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

நேற்று இரவு விழுப்புரத்தில் கஞ்சா போதையில் தகராறு நடந்து இருக்கிறது. இதனை தடுக்க போனவர் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது. அதிமுக பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆரம்ப காலம் முதல் நான் சொல்லி வருகிறேன். சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அண்ணா திமுக கூட்டணி தொடரும்’’.

அம்மா உணவகத்தில் தரமான உணவு தட்டுப்பாடின்றி வழங்கப்படுவதாக அமைச்சர் கூறியிருக்கிறாரே, ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்றும் அமைச்சர் பேசினாரே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘‘இதற்கு என்ன ஆதாரம் திரட்ட முடியும். ஏழை எளிய மக்களுக்கு இங்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமாகவும், ருசியாகவும் இருந்தது. தேவையான பொருட்களை தடையில்லாமல் வழங்கினோம். ஆனால் இன்றைக்கு அந்த உணவு ருசியுமில்லை, தரமும் இல்லை. அம்மா உணவகத்தில் ஆள்குறைப்பு நடந்து இருக்கிறது. பொருட்கள் மிகக்குறைவாக வாங்கி கொடுக்கிறார்கள். எனவே தரமும் இல்லை, ருசியுமில்லை. நாங்கள் என்ன ஆதாரத்தை கொடுக்க முடியும். நீங்கள் (நிருபர்) அங்கு சென்று சாப்பிட்டு விட்டு ஆட்சியாளர்களிடம் சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.