பிரபல நடிகர் அஜித் குமாரின்
Take a fresh look at your lifestyle.

நடிகர் அஜித் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்: நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

28

பிரபல நடிகர் அஜித் குமாரின் தந்தை பி. சுப்பிரமணியம் இன்று 24.03.2023 அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நடிகர் சிவா, இயக்குனர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் தியாகராஜன் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

பி.சுப்பிரமணியம் உடல், வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் வேனில் பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மயானத்திற்குள் தந்தையின் உடலை அஜித்குமார் தூக்கிச் சென்றார். அங்கு இறுதி சடங்கு நிகழ்ச்சியில் அஜித், தாய் மோகினி, மனைவி ஷாலினி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கை அஜித் செய்தார். பின்னர் தந்தையின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அஜித்குமாரை ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தந்தை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ‘‘பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.