Take a fresh look at your lifestyle.

ஐதராபாத் போலீசின் அதிரடி: நாடு முழுவதும் 17 கோடி பேரின் தகவல்களை திருடிய 7 பேர் கைது

27

நாடு முழுவதும் முக்கிய நபர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடிப் பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தகவல்கள் திருடப்படுவதாக வந்த புகார்களின் பேரில், ஐதராபாத் நகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததுடன், சிலரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ஜஸ்ட் டயல் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 16. 8 கோடி இந்தியர்களின் முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடி ஒரு கும்பல் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

அந்த 7 பேர் கொண்ட கும்பலை கூண்டோடு தெலுங்கானாவின் சைபராபாத் போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட குமார் நிதிஷ் பூஷன், குமாரி பூஜா பால், சுஷீல் தோமர், அதுல் பிரதாப் சிங், முஸ்கன் ஹாசன், சந்தீப் பால் மற்றும் ஜியா-உர்-ரஹ்மான் ஆகியோர் ஐதராபாத் அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்தார்.

விசாரணையில் இந்த கும்பல் கடந்த 2021ல் தரவுத் திருட்டைத் தொடங்கி யதிலிருந்து முக்கிய நபர்களின் தரவுகள் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் முதல் பான் கார்டு மற்றும் வங்கி விவரங்கள் வரை திருடி இருப்பதும், சில சந்தர்ப்பங்களில் மாத வருமானம், கடன்கள் மற்றும் காப்பீடு பற்றிய தகவல்களையும் திருடி உள்ளனர் என்று தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே, இதேபோன்ற வழக்கில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் பரோடாவின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை திருடியதற்காக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒன்பது பேரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர்.