சென்னை பெருநகரின் காவல் நிலையங்களில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு முதியோர் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் பாதுகாப்பு, நலன் மற்றும் கையாளும் விதம் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சென்னை நகரில் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை நகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் லோகநாதன் (தலைமையிடம்), மகேஸ்வரி (மத்திய குற்றப்பிரிவு) ஆகியோர் தலைமையில், சென்னை பெருநகரிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள இன்று (25.03.2023) காவல் ஆணையரகத்திலுள்ள கலந்தாய்வு கூடத்தில், ஒரு நாள் பயிற்சி வகுப்பு (One day Workshop) நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பில், சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு, துணை ஆணையாளர் வனிதா, Help Age India இயக்குநர் எட்வின் பாபு, மனித மறுமலர்ச்சி துறை, இயக்குநர் ஜாபர் அலி ஆகியோர், முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும், வயதானவர்களின் பிரச்சினைகள் மற்றும் அதை தீர்க்கும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், குடும்ப ஆலோசனை பற்றியும், அவசர காலத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறை பற்றியும் வீடியோ மற்றும் கலந்தாய்வு மூலம் பயிற்சி அளித்தனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேஷுபாலன் ராஜா முதியோர்களின் பராமரிப்பு மற்றும் நலன் குறித்த சட்டங்கள் (Maintenance and Welfare of Parents and Senior Citizen Act -2007) குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும், முதியோர்களுக்கான உதவி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி முதியோர்களுக்கான தேவைகள் குறித்து எளிதாக அணுகுவதற்கு உதவி எண் 14567 மற்றும் முதியோர் உதவி எண்.1253 குறித்து எடுத்துரைத்து, ஆலோசனைகள் வழங்கினார். பின்னர், சமூக பாதுகாப்புத் துறை, இணை இயக்குநர் தனசேகரபாண்டியன் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளும் முறை மற்றும் விசாரணை செய்யும் முறை குறித்தும், பாதிக்கப்பட்ட குழத்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை குறித்தும், அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பாவியல் குற்ற வழக்குகளில் எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும், Standard Operating Procedure (SOP) பற்றியும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி எடுத்துரைத்தார்.
மேலும் போக்சோ சட்டம், இளம் சிறார் நீதிச்சட்டம் (Juvenile Justice Act) மற்றும் SJPU பணிகள் குறித்தும் வழக்கறிஞர் திரு.சுப தேன்பாண்டியன் ஆலோசனை வழங்கினார். இப்பயிற்சி வகுப்பில் உதவி ஆணையாளர்கள் கவைச்செல்வன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதரான குற்றத்தடுப்பு பிரிவு), சீனிவாசன் (வரதட்சனை தடுப்புப்பிரிவு), காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவம் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.