Take a fresh look at your lifestyle.

திருவல்லிக்கேணி உள்பட 4 இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கும்பல் கைது

30

மீனம்பாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் 29.3 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக, புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (13.03.2023) காலை, மீனம்பாக்கம், சாந்தி பெட்ரோல் பங்க் அருகில், ரகசியமாக கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பார்சலை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லல்லு முண்டல் (40) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி லல்லு முண்டல் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அதே போல, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று கோயம்பேடு, மார்கெட் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நாமக்கல்லைச் சேர்ந்த லோகநாதன் (எ) வீரப்பன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை, சூளை ரவுண்டனா அருகே பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்த நாமக்கல்லைச் சேர்ந்த துரைராஜ் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மே தின பூங்கா அருகில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்த மோகன் (எ) தர்கா மோகன் (59) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி தர்கா மோகன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 1 கொலை, 11 கொலை முயற்சி உட்பட 23 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (12.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.