Take a fresh look at your lifestyle.

அ.தி.மு.க. – பாஜ., கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

10

அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நீடித்தது. அப்போது அகில இந்திய பா.ஜ.க. தலைவர் நட்டா, தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்று டெல்லியில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அப்போது பாரதீய ஜனதா தலைவர் நட்டாவும் உடன் இருந்தார். 5 மாதத்திற்கு முன்பு சந்தித்தேன். அதன் அடிப்படையில் இன்றும் இந்த சந்திப்பு நடைபெற்றது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

* பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா? பாரதீய ஜனதாவுடன் அண்ணா தி.மு.க. கூட்டணி தொடர்கிறதா?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தோம். 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. எனவே பாரதீய ஜனதா அண்ணா தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

* உங்களுக்கும், பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதே?

இது தவறான கேள்வி. எங்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே எந்தவித தகராறும், மனக்கசப்பும் இல்லை. அப்படி இருந்தால் எப்படி அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்திருப்பார். எனவே திட்டமிட்டு குளறுபடி ஏற்படுத்த வேண்டும் என்று கேள்விகளை கேட்கிறீர்கள். அண்ணா தி.மு.க.வுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இடையே விரிசல் ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள். எனவே தான் உள்நோக்கத்துடன் கேள்விகளை கேட்கிறீர்கள். யாராக இருந்தாலும் தங்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். எங்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். ஆனால் தி.மு.க.வில் அப்படி அல்ல, நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கிறார்கள். தி.மு.க. எந்த தவறு செய்தாலும் அதனை எதிர்த்து பேசுவது இல்லை. ஆமோதிக்கிறார்கள். அத்தி பூத்தாற்போல் 12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்த்து வெளிநடப்பு செய்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

*  தேர்தல் ஆணையம் உங்களை பொதுச்செயலாளராக அங்கீகரித்து இருக்கிறதா?

பொதுக்குழுவை பதிவேற்றம் செய்திருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டார்கள். தேர்தல் ஆணையம் முழுமையாக தீர்ப்பு அளித்து விட்டது. ஊடகங்களும் தெளிவுபடுத்தி விட்டது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளிப்படை தன்மையானது. நீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. அண்ணா தி.மு.க. எங்கள் பக்கம் உள்ளது என்று எடப்பாடி கூறினார்.

* ரூ. 30 ஆயிரம் கோடி ஊழல் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து?

இது சாதாரண விஷயம் அல்ல. அதிர்ச்சியூட்டும் தகவல். தமிழக நிதியமைச்சர் ஆடியோவில் பேசிய பேச்சு பரவலாக வந்திருக்கிறது. இது மிகப்பெரிய செய்தி. ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருப்பதாக அவர் பேசியிருக்கிறார். அவர் 2 பேரை பற்றி குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதாவது உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் ரூ.30 ஆயிரம் கோடியை வைத்து கொண்டு என்ன செய்வது தெரியாமல் இருக்கிறார்கள் என்று அவர் பேசி இருக்கிறார். இப்போது அவர் பேசிய 2 வது ஆடியோவும் வெளிவந்திருக்கிறது. எனவே இதுபற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். வெட்டியும் ஒட்டியும் ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள் என்று பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார், ஆடியோ வெளியாகி 3 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. பத்திரிகைகளில் பரபரப்பாக செய்தி வந்தபின் இப்போது பழனிவேல் தியாகராஜன் இதுபோன்று கூறியிருக்கிறார். 2 ஆண்டுகளில் இந்த அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. தி.மு.க. அமைச்சரவையில் உள்ள நிதி அமைச்சரே இதுபற்றி பேசியிருக்கிறார். எனவே இதுபற்றி மத்திய அரசு ஆய்வு செய்யவேண்டும். இதனை பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது.

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது இதுபற்றி அவரது கவனத்துக்கு கொண்டு வந்தோம். அவருக்கும் இதனை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார். எனவே உண்மைத் தன்மையை உரியமுறையில் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பற்றி நிதியமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியானால் முதலமைச்சர் இதற்கு ஏன் இதுவரை பதில் சொல்லவில்லை. எது எதற்கோ உடனுக்குடன் முதலமைச்சர் பதில் சொல்கிறார். ஆனால் இதற்கு மட்டும் பதில் சொல்லவில்லையே ஏன்? எனவே தான் எங்களுக்கு இதில் சந்தேகம் இருக்கிறது என்று எடப்பாடி கூறினார்.

* அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று உள்ளதாக மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக அமைச்சர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்?

எங்கே ஊழல் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எங்கே முறைகேடு என்று சொல்லி இருக்கிறார்கள். நிதி திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2021 22 ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் 28,823 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அனுமதி அளித்து விட்டு, அதனை செலவு செய்யவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கொரோனா காலம். நாடே ஸ்தம்பித்து விட்டது. ஓராண்டு காலமாக எந்த பணியும் நடைபெறவில்லை. இலக்கு நிர்ணயித்து பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் அதனை செலவு செய்ய முடியவில்லை. கொரோனா காலத்தில் ஏராளமான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இருந்தன. இதில் எங்கே முறைகேடு இருந்தது, சொல்லுங்கள்.

டெண்டரில் முறைகேடு இருந்ததாக சொல்லி இருக்கிறார்கள். அத்தனையும் பொய். டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சி.ஏ.ஜி. அறிக்கையிலும் முறைகேடு நடந்ததாக சொல்லவில்லை. அண்ணா தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் சிறப்பான முறையில் கையாளப்பட்டது.

* கொடநாடு கொலைவழக்கு பற்றி

இது பற்றி நான் சட்டமன்றத்தில் விரிவாக பேசி இருக்கிறேன். ஆனால் நீங்கள் தான் பத்திரிகைகளில் போடவில்லை. கொடநாடு வழக்கு எப்போது வந்தது? நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தான் அந்த வழக்கு வந்தது. நாங்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தோம். ஜெயிலில் அடைத்தோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கொரோனா காலம் என்பதால் வழக்கு நடைபெறாமல் இருந்தது. இந்த வழக்கில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருந்தார்கள். இந்த வழக்கு நடைபெற்று கொண்டு இருந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது யார்? தி.மு.க. காரர்கள் தான். குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தார்கள். அவர்கள் ஸ்டாலினிடம் புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண குற்றவாளி அல்ல. கேரள மாநிலத்தில் கொடூரமாக பல்வேறு குற்றங்களை செய்தவர். அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அப்படி பட்டவரை தி.மு.க.வினர் ஜாமீனில் எடுத்து இருக்கிறார்கள்.

இப்படி இவர்கள் ஜாமீனில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் மர்மம் இருக்கிறது. எனவே தான் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கிறேன் என்று எடப்பாடி கூறினார்.

*  ஓ. பன்னீர்செல்வம் மனம் மாறி திருந்தி வந்தால் கட்சியில் சேர்த்து கொள்வீர்களா?

நான் பொதுச்செயலாளராக பதவி ஏற்றபோதே இதுபற்றி தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஒரு சிலரை தவிர, அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று விசுவாசமாக இருப்பவர்கள் கட்சியில் சேரலாம். துரோகம் விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பதை அன்றைக்கே தெளிவாக சொல்லிவிட்டேன். அது யார் என்பது உங்களுக்கே தெரியும். பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி கொடுத்தது யார்? பொதுக்குழு தான் பதவி கொடுத்தது. எனவே அவரை நீக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அது எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள். தி.மு.க.வின் ‘பி’ டீமாக ஓ.பி.எஸ். செயல்படுகிறார். இது அனைவருக்கும் தெரியும் என்றும் எடப்பாடி கூறினார்.

நான் சாதாரண ஒரு விவசாயி குடும்பத்தில் இருந்து வந்தவன். இந்த அளவுக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அது பெரிய விஷயம். ஆனால் அதனை பாராட்ட உங்களுக்கு மனம் இல்லை. 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தேன். ஸ்டாலின் 24 மணி நேரமும் மூளையை எதற்கு செலவிடுகிறார் என்றால் அண்ணா தி.மு.க. கட்சியை உடைப்பதற்கும், முடக்குவதற்கும் தான். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.

அப்போது தி.மு.க.வினர் எப்படி மிகமிக கேவலமாக அறுவறுக்க தக்க வகையில் நடந்து கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சபாநாயகரை கீழே இழுத்து தள்ளினார்கள். மேஜை நாற்காலிகளை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். மைக்கை பிடுங்கி எறிந்தார்கள். சபாநாயகர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். அவரை எப்படி எல்லாம் தரக்குறைவாக பேசினார்கள், நடந்து கொண்டார்கள். அவரது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்கள். இவ்வளவு எல்லாம் நடந்தும் கூட நாங்கள் 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தோம்.

எந்த இடத்திற்கு சென்றாலும் சிறப்பான ஆட்சியை தந்தீர்கள் என்று மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் எப்போது போகும் என்று தான் மக்கள் பேசுகிறார்கள் என்று எடப்பாடி கூறினார்.